இந்தியாவில் கடந்த 17ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு, ஆண்டுக்கு ஆண்டு விருந்தாகவே அமைந்து வருகின்றது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு நடைபெறும் இந்த மிக நீண்ட தொடரில் சர்வதேசத் தரத்தில் விளையாடும் வீரர்கள் தொடங்கி இந்தியாவில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் என அனைவரும் இணைந்து விளையாடும் இந்த ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணிக்கு பல ஜாம்பவான்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.


அசத்தும் பும்ரா:


அதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமாகி இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே விளையாடி வரும் ஜஸ்பிரித் பும்ரா இந்திய பந்து வீச்சுக் குழுவின் சிறந்த வீரராகவே உள்ளார்.  இந்நிலையில் பும்ரா நடப்பு தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றார். நடப்புத் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 


இப்படியான நிலையில் பும்ரா அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு பும்ரா தன்னை தயார்படுத்திக் கொள்ள அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து வரும் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.


இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளரான பொல்லார்ட், “ மும்பை அணிக்குள் இதுபோன்று இதுவரை யாரும் எந்தவிதமான பேச்சினையும் தொடங்கவில்லை. பும்ராவும் தனது ஓய்வு குறித்து இதுவரை எந்தவிதமான விவாதத்தையும் எங்களிடம் கொண்டுவரவில்லை. ஆனால் உலகக்கோப்பைக்கு ஒரு அணியைத் தேர்வு செய்யும்போது இதுபோன்ற நிலை ஏற்படுவது வழக்கமானது தான்” என பதில் அளித்துள்ளார். 


பும்ராவுக்கு ஓய்வு கிடைக்குமா? 


நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி கிட்டத்தட்ட தனது ப்ளே ஆஃப் வாய்ப்பினை இழந்துவிட்டது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி அதில் 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் மும்பை அணி தனது கடைசி லீக் போட்டியில் வரும் 17ஆம் தேதி லக்னோ அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.


இதற்கடுத்து பும்ராவுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது, ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி இதுதான் என்பதால், பும்ராவுக்கு கிட்டத்தட்ட ஒருவாரம் முதல் 10 நாட்கள் வரை ஓய்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இதேபோல், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டவர்களுக்கும் ஓய்வு எடுக்க வாய்ப்பு கிடைக்கும்.