இந்திய கிரிக்கெட் அணியில் தனகான ஒரு நிரந்தரமான இடத்தினை அமைக்க கிடைக்கும் வாய்ப்புகளில் திறமையை வெளிப்படுத்தி வரும் வீரர்களில் விக்கெட் கீப்பர் மற்றும் இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் இஷான் கிஷனும் ஒருவர். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவரை இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச போட்டிகளில் விளையாட வைத்தது.  சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியில் இஷான் கிஷன் டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். அவ்வப்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடியும் வருகின்றார். 


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக இஷான் கிஷனுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதற்கு காரணமாக, இஷான் கிஷன் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடததே முக்கிய காரணமாக கூறப்பட்டது. இது குறித்து ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இது குறித்து அப்போது எதுவும் தெரிவிக்காத இஷான் கிஷன் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியான அரைசதத்திற்குப் பின்னர், பேசுகையில், ”நான் ரஞ்சிக் கோப்பைக்கு விளையாட தயாராகிக் கொண்டு இருந்தபோதுதான் இதுபோன்ற தகவல்கள் வெளியானது. மேலும் பிசிசிஐ-யில் நடப்பது நமது கரங்களில் இல்லை” எனத் தெரிவித்தார். 






வரும் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்கவுள்ளதால், இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது இதுவரை மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் வீரர்கள் எவ்வாறு செயல்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்து இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடி வரும் இஷான் கிஷன் மும்பை அணியில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். 


நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சொதப்பிய இஷான் கிஷன் அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் களத்தினை சிறப்பாக புரிந்து கொண்டு அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், 34 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் விளாசி 69 ரன்கள் குவித்து அரைசதத்தினை பதிவு செய்தார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள இஷான் கிஷன் 88 பந்துகளை எதிர்கொண்டு 161 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் மொத்தமாக 15 பவுண்டரியும் 12 சிக்ஸர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.