நடப்பு ஐபிஎல் தொடரின் 51 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இந்தப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது அணி முதலில் பந்து வீசும் என கூறினார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. மும்பை அணிக்கு ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் இருந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரில் இஷான் கிசனும் ஐந்தாவது ஓவரில் நமன் தீரும் ஆறாவது ஓவரில் ரோகித் சர்மாவும் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். பவர் பிளே முடிவில் மும்பை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து மும்பை அணியை மீட்கும் பணியை சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா சிறப்பாக செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போது திலக் வர்மா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து கைகோர்த்த சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹல் வதேரா கூட்டணி அடுத்த சில ஓவர்கள் மட்டும் விக்கெட்டை இழக்காமல் விளையாடியது. ஆட்டத்தின் 11 வது ஓவரில் நேஹல் வதேரா தனது விக்கட்டினை இழந்து வெளியேற 12 வது ஓவரில் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 11.2 ஓவர்களில் மும்பை அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனால் மும்பை அணிக்கு அடுத்த 8.4 ஓவர்களில் வெற்றிக்கு 99 ரன்கள் தேவைப்பட்டது. பொறுமையாகவே விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் தான் எதிர்கொண்ட 19வது பந்தில் தனது முதல் சிக்சரை பறக்கவிட்டார். ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டை இழந்த பிறகு மும்பை அணிக்கு இருந்த நம்பிக்கையான பார்ட்னர்ஷிப் என்றால் அது சூர்யகுமார் யாதவும் டிம் டேவிட்டும்தான். இதில் டிம் டேவிட் பொறுமையாகவே விளையாட சூர்யகுமார் யாதவ் ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். ஆட்டத்தின் 14 வது ஓவரில் மட்டும் சூர்யகுமார் யாதவ் 3 பவுண்டரி ஒரு சிக்சர் என மொத்தமாக அந்த ஓவரில் 20 ரன்கள் குவிக்க காரணமானார். இதனால் மும்பை அணி நூறு ரன்களைக் கடந்தது மட்டுமில்லாமல் ஆட்டத்தின் மீதும் நம்பிக்கை ஏற்பட்டது.
15 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் அடுத்த 5 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் மும்பை அணிக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால் 16வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 35 பந்தில் 6 பவுண்டரி இரண்டு சிக்ஸர் உட்பட மொத்தம் 56 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
இதனால் அனைத்து பொறுப்புகளும் டிம் டேவிட் வசம் சென்றது. கடைசி 3 ஓவர்களில் மும்பை அணிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் டிம் டேவிட்டும் அடுத்து வந்த ப்யூஸ் சாவ்லாவும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் 3.5 ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளி நடப்புத் தொடரில் தனது சிறந்த பந்து வீச்சினை வெளிப்படுத்தினார். கொல்கத்தா அணி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் வான்கடேவில் மும்பைக்கு எதிராக வெற்றியை பதிவு செய்துள்ளது.