இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் இன்று (ஏப்ரல் 13) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இரண்டாவது போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன. 


புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் ஏழாவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐந்து போட்டிகளில் விளையாடி, மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. 


இரு அணிகளும் ஐபிஎல்லில் எப்படி..? 


ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் டாப் அணிகளாக பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த முறை ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவும், எம்.எஸ். தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்டும் தலைமை தாங்குகின்றனர்.


இதுவரை இரு அணிகளுக்கு நேருக்குநேர்: 


ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 36 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், இரு அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 


மும்பை - சென்னை இடையேயான இன்றைய போட்டியில் அனைவரது பார்வையும் மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மா மீதுதான் உள்ளது. தோனியின் கேப்டன்சி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடுவது இதுவே முதல்முறை. 42 வயதிலும் தோனி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். 


பிட்ச் ரிப்போர்ட்: 


மும்பை வான்கடே ஸ்டேடியத்தின் ஆடுகளம் எப்போதும் பேட்ஸ்மேன்களில் சொர்க்கமாக பார்க்கப்படுகிறது. அவுட் பீல்ட் சூப்பராக உள்ள நிலையில், பந்து பேட்டில் பட்டவுடன் எல்லையை நோக்கி பறக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியின் தொடக்கத்தில் விக்கெட்களை வீழ்த்தவும் வாய்ப்பு அதிகம். வான்கடே ஸ்டேடியத்தில் இதுவரை 112 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில், 61 போட்டிகள் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி வெற்றிபெற்றது. இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை மட்டுமே தேர்வு செய்யலாம். 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:


சென்னை சூப்பர் கிங்ஸ்:


1. ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), 2. ரச்சின் ரவீந்திரா, 3. டேரில் மிட்செல், 4. ஷிவம் துபே, 5. எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), 6. அஜிங்க்யா ரஹானே, 7. சமீர் ரிஸ்வி, 8. ஜடேஜா, 9. ஷர்துல் தாக்கூர், 10. முஸ்தாபிசுர் ரஹ்மான், 11. துஷார் தேஷ்பாண்டே.


மும்பை இந்தியன்ஸ்:


1. இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. ஹர்திக் பாண்டியா (கேப்டன்), 5. திலக் வர்மா, 6. டிம் டேவிட், 7. ரொமாரியோ ஷெப்பர்ட், 8. முகமது நபி , 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. ஜஸ்பிரிட் பும்ரா, 11. ஜெரால்ட் கோட்ஸி.