ஐபிஎல் 2024ல் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. 


இந்த ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்ஸின்போது, மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டு, தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் மற்றும் பேட்ஸ்மேன் டிம் டேவிட் ஆகியோர் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


என்ன நடந்தது..? 


முதலில் டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 7 ஓவர்களில் 70 ரன்கள் குவித்து அசத்தியது. 


8வது ஓவர் வீசிய பதிரானா இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவை வெளியேற்றினார். தொடர்ந்து 14வது ஓவரில் திலக் வர்மாவும் 31 ரன்களில் வெளியேற, ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 6 ஓவர்களில் 77 ரன்கள் தேவையாக இருந்தது. 15வது ஓவரில் பந்துவீச வந்த ஷர்துல் தாக்கூர், ஒரு பந்தை கொஞ்சம் பேட்ஸ்மேனுக்கு தள்ளி வீசினார். அந்த பந்தை ஹர்திக் பாண்டியா நகர்ந்து அடிக்க முடிந்ததால், அது வைடு கொடுக்கப்படவில்லை. இதை பார்த்து ஷாக் ஆன ஹர்திக் பாண்டியா ரிவ்யூ கேட்டார். ரிப்ளேவில் பார்த்தபோது, பாண்டியா நகர்ந்தது தெரிய வந்தநிலையில், மூன்றாவது அம்பயர் அதற்கு வைடு தரவில்லை. 






இதனால் வெளியே அமர்ந்திருந்த  மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டு, தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஆத்திரமடைந்து, அங்கு இருந்த 4வது அம்பயரிடம் ஏன் வைடு தரவில்லை என டைம் அவுட் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், 4வது அம்பயரை சுற்றி மொத்த மும்பை அணியின் துணை நிலை பயிற்சியாளர்களும் அழுத்தம் கொடுத்தனர். அப்போது ஓவர் முடிந்ததும், பேட்டிங் பயிற்சியாளர் கீரன் பொல்லார்ட், தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் மற்றும் பேட்ஸ்மேன் டிம் டேவிட் ஆகியோர் களத்திற்குச் செல்லத் தொடங்கினர். ஆனால் நான்காவது நடுவர் அனைவரையும் தடுத்து மீண்டும் வரச் சொன்னார். அப்போது, மும்பை அணி 15 வது ஓவருக்குப் பிறகு டைம் அவுட் கேட்டது. ஆனால், சில காரணங்களால் அது கொடுக்கப்படவில்லை. 


திடீரென டைம் அவுட் கேட்டு களத்தில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் பேச முயன்றார் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர். ஆனால், டைம் அவுட் கேட்பதற்கான நேரம் முடிந்து விட்டது என கூறி நான்காவது அம்பயர் தடுத்தார். இதையடுத்து பொல்லார்டும், டிம் டேவிட்டும் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது, ​​டேவிட் 'டைம் அவுட்' என்றும் குறிப்பிட்டார். பின்னர் 16வது ஓவரின் மூன்றாவது பந்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட் விழ, மும்பைக்கு டைம் அவுட் கிடைத்தது. 


போட்டி சுருக்கம்: 


 வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் எடுத்தார். இது தவிர, ஷிவம் துபே வேகமாக விளையாடி 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 66* ரன்கள் எடுத்தார். பின்னர் இலக்கை துரத்த வந்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.