கிரிக்கெட் உலகில் கவனிக்கப்படும் லீக் தொடர்களில் முக்கிய அங்கம் வகிப்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல்தான். இந்த ஐபிஎல் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கி 2023ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக நடத்தப்பட்டு தற்போது அடுத்த சீசனுக்கும் தயாராகிவிட்டது.


 


 


ஐ.பி.எல். தொடங்கப்பட்ட காலத்தில் கிரிக்கெட் ரசிகர்களாக மட்டுமே இருந்த இந்திய ரசிகர்கள் தற்போது தங்களது அபிமான அணிகளின் வெறித்தனமான ரசிகர்களாக மாறும அளவிற்கு ஐ.பி.எல். இந்திய கிரிக்கெட் அரங்கில் மட்டும்  இல்லாமல் உலக கிரிக்கெட் அரங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒரு அணி நிர்வாகம் மிகவும் சர்ப்ரைஸாக சிறப்பான முடிவை எடுத்தால் அதனை கொண்டாடவும், தவறான முடிவை எடுத்தால் அணி நிர்வாகத்தை வறுத்தெடுக்கவும் ரசிகர்கள் தவறுவதில்லை. இந்தியாவில் எத்தனையோ லீக் போட்டிகள் இருந்தாலும் ஐ.பி.எல். இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வீரர்களை ஐ.பி.எல். உருவாக்கி கொடுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் பல இளைஞர்களை கிரிக்கெட் நோக்கி நகர்த்தியுள்ளது. 


ஐபிஎல்-இல் தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றது. இதில் மிகவும் முக்கியமான அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். மிகவும் பலம் வாய்ந்த அணியாக ஐபிஎல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் கோப்பையை கடந்த 2013ஆம் ஆண்டுதான் வென்றது. அதன் பின்னர் 2015, 2017, 2019 மற்றும் 2020 என இதுவரை 5 முறை கோப்பைகளை வென்றுள்ளது. இந்த கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் வென்றது.


இதுமட்டும் இல்லாமல் ஐபிஎல்-இல் ஒருசில அணிகள் எல்லாம் இன்னும் ஒரு கோப்பை கூட வெல்லாத நிலையில் மும்பை அணி முதல் அணியாக 5 கோப்பைகளை வென்றது. இதுமட்டும் இல்லாமல் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியுள்ளார். மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது என்றால் கோப்பையில் மும்பை அணியின் பெயரை தாராளமாக பொறித்துவிடலாம், எனும் அளவிற்கு அரக்கத்தனமாக மும்பை அணி விளையாடும். இப்படிப்பட்ட மும்பை அணியின் பலம் பலவீனம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 


மேட்ச் வின்னர் மும்பை


மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் என அவர்களின் கடப்பாறை பேட்டிங் லைனை மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களே சொல்லுவார்கள். ஆனால் உண்மையிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் என்பது மும்பை அணியின் கோர் டீம்.  மும்பை அணியின் தற்போதைய கோர் டீம் என்றால் ரோகித், பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா. 


இந்த கோர் டீமை மும்பை அணி எத்தைனை மும்பை அணி இந்தியாவில் மிகவும் சிறிய நகரங்களில் விளையாடும் இளம் வீரர்களை தேர்வு செய்து அவர்களை ஏலத்தில் எடுத்து அந்த வீரர்களை ஐபிஎல் போட்டிக்காக மட்டும் இல்லாமல் சர்வதேச போட்டிக்காக செதுக்குவார்கள். அப்படி உருவான வீரர்கள்தான் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், திலக் வர்மா, நேகல் வதேரா, ஆகாஷ் மத்வால், விஷ்ணு வினோத் ஆகியோர். 




மும்பை அணியின் ப்ளேயிங் லெவன் எப்போதுமே எதிரணியினருக்கு சவாலை அல்லது அச்சத்தை இயல்பாகவே ஏற்படுத்திவிடும். எதிரணி மும்பை அணியை வீழ்த்த ஒரு திட்டத்தோடு களத்திற்கு வந்தால் அதனை எதேனும் இரண்டு மும்பை வீரர்கள் சின்னாபின்னமாக்கிவிடுவார்கள். மும்பை அணியின் ப்ளேயிங் லெவன் எப்போதுமே மேட்ச் வின்னர்களாகத்தான் இருந்துள்ளனர்.  இதுவே மும்பை அணியின் பெரும் பலமாக உள்ளது. 


மும்பை அணியின் பலம்


மும்பை அணியின் பலம் என்றால் அதனுடைய பேட்டிங் மற்றும் பவுலிங் லைன் -அப்தான். கடப்பாறை பேட்டிங் என பெயர் பெற்ற மும்பை அணிக்கு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை யார் வேண்டுமானாலும் ஆடுவார்கள். இதனால் எதிரணி எவ்வளவு பெரிய ஸ்கோரை நிர்ணயித்தாலும் அதனை மும்பை அணி எட்டிவிடும். கடந்த இரண்டு சீசன்களில் அணியில் இல்லாத ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளார்.


இது அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங்கினை பலப்படுத்தும். அதேபோல் பவுலிங்கில் கடந்த சீசனில் அணியில் இல்லாத பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். பவுலிங்கில் கைகொடுக்க தென்னாப்பிரிக்காவின் கோட்ஸீ உதவுவார் என எதிர்பார்க்கலாம்.  அதேபோல், சுழற்பந்து வீச்சுக்கு முகமது நபியை ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல் கேப்டன்சியில் இதுவரை ரோகித் தன்னை நிரூபித்திருந்தாலும், ஹர்திக் பாண்டியாவும் தனது கேப்டன்சியை கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் அணியை இறுதிப் போட்டிக்கு வழிநடத்திச் சென்றார். 




மும்பை அணியின் பலவீனம்


மும்பை அணியின் பலவீனம் என்றால் அது அந்த அணியின் மிடில் ஓவர் பவுலிங்காகத்தான் இருந்துள்ளது. அதேபோல் மும்பை அணியின் பந்து வீச்சு வரிசையில் அணி தனது ப்ளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது என்பதைப் பொறுத்துதான் கூறமுடியும். 


மொத்தத்தில் மும்பை


கடந்த சீசன்களில் இல்லாத வீரர்கள் மும்பை அணிக்கு திரும்பியுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அசுரபலம் வாய்ந்த அணியாக உள்ளது. இந்த ஆண்டு மும்பை அணி களத்தில் சாதித்தால் நிச்சயம் மும்பை அணி அடுத்த கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.