கே.எல்.ராகுல் மற்றும் குயிண்டன் டி காக் ஆகியோர் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டனர். தொடக்க வீரர்களாக களமிறங்கி இந்த இரண்டு வீரர்களும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 


இதன்மூலம், ராகுல் மற்றும் டி காக் இணைந்து தங்களது சொந்த சாதனையை தாங்களே முறியடித்துள்ளனர்.


அப்படி என்ன சாதனை..? 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுத்த இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ராகுலும் டி காக்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேப்டன் கேஎல் ராகுல் 82 ரன்களும், டி காக் அரைசதமும் அடித்து மொத்தமாக 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தொடக்க வீரர்களாக  களமிறங்கி அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினர். 


இந்த பட்டியலில் சென்னைக்கு எதிரான மிகப்பெரிய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்ற சாதனை ரஹானே மற்றும் ஷேன் வாட்சன் பெயரில் உள்ளது. இருவரும் 2015ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய போது 144 ரன்கள் எடுத்தனர். 2021 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய போது தவான் மற்றும் பிரித்வி ஷா ஜோடி 138 ரன்கள் எடுத்தனர்.


சென்னைக்கு எதிரான மிகப்பெரிய தொடக்க பார்ட்னர்ஷிப்பின் அடிப்படையில் தவான் மற்றும் வார்னர் ஜோடியை ராகுல்-டி காக் ஜோடி முந்தியுள்ளனர். கடந்த, 2014ல் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது தவானும், வார்னரும் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். மேலும், இந்த ஐபிஎல் சீசனில் ராகுல் இதுவரை பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார், அதில் அவர் இதுவரை 40.86 சராசரியில் 286 ரன்கள் எடுத்துள்ளார்.


ஐபிஎல்லில் சிஎஸ்கேக்கு எதிரான மிகப்பெரிய தொடக்க பார்ட்னர்ஷிப்:



  • 144 - அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷேன் வாட்சன் (RR), அகமதாபாத், 2015

  • 138 - ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா (DC), மும்பை வான்கடே ஸ்டேடியம், 2021

  • 134 - கே.எல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் (LSG), லக்னோ, 2024

  • 127 - கிரேம் ஸ்மித் மற்றும் ஸ்வப்னில் அஸ்னோத்கர் (RR), சென்னை, 2008

  • 116* - குயின்டன் டி காக் மற்றும் இஷான் கிஷன் (MI), ஷார்ஜா, 2020

  • 116 - டேவிட் வார்னர் மற்றும் ஷிகர் தவான் (SRH), ராஞ்சி, 2014


ஐபிஎல்லில் அதிக அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர்: 


ஐபிஎல்லில் அதிக அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றுள்ளார். கே.எல்.ராகுல் தற்போது விக்கெட் கீப்பராக 25 அரைசதங்கள் அடித்துள்ளார். அதேசமயம், எம்எஸ் தோனி 24 அரைசதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். குயின்டன் டி காக் 23 அரை சதங்களை அடித்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 


ஐபிஎல்லில் விக்கெட் கீப்பராக அதிக அரைசதம் அடித்த வீரர்கள்:



  • கேஎல் ராகுல் - 25

  • எம்எஸ் தோனி - 24

  • குயின்டன் டி காக் - 23

  • தினேஷ் கார்த்திக் - 21

  • ராபின் உத்தப்பா - 18


ஐபிஎல்லில் கேப்டனாக அதிக ஆட்டநாயகன் விருது:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 82 ரன்கள் குவித்து மேட்ச் வின்னிங் செய்ததற்காக கே.எல்.ராகுலுக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக ராகுல் பெற்ற 9வது ஆட்ட நாயகன் விருது இதுவாகும். இந்தப் பட்டியலில் 16 முறை கேப்டனாக இந்த விருதை வென்ற எம்எஸ் தோனி முதல் இடத்தில் உள்ளார். அதேசமயம் ராகுல் தற்போது இந்தப் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.