மும்பை இந்தியன்ஸ் அணிதான் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா என்ற உலகம் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை கொடுத்தது. அப்படி இருக்க ரோஹித் சர்மாவுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யார் தலைமை தாங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, கடந்த 2022 தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிடும்போது, ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டது. ஆகவே, ரோஹித்துக்குப் பிறகு, அணியின் அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா பார்க்கப்பட்டார். 


இதை சரியாக பயன்படுத்திகொண்ட புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை தங்கள் பக்கம் இழுத்துகொண்டு கேப்டன்சி பதவியையும் வழங்கியது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, கடந்த 2022ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும், 2023ம் ஆண்டு இறுதிப்போட்டி வரையும் சென்றது. 






இந்தநிலையில், இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை மீண்டும் எடுத்தது. இதன் காரணமாக, ரோஹித் சர்மாவுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாதான் தலைமை தாங்க போகிறார். இதனால்தான், மும்பை அணி நிர்வாகம் எவ்வளவு கோடியை கொடுத்து ஹர்திக் பாண்டியாவை எடுத்துள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இப்படி ஒருபுறம் கூறிவரும் நிலையில், மறுபுறம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். அது தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. அதில், பும்ராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சில சமயங்களில் அமைதியாக இருப்பதே சிறந்த பதில் என்று எழுதப்பட்டுள்ளது. 






இந்த பதிவு என்ன காரணத்திற்காக பும்ரா போட்டார் என்று தெரியவில்லை. ஆனால், இதுகுறித்து ஊகங்களை கிளப்பும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றன. அதில், ரோஹித்துக்குப் பிறகு பும்ராதான் கேப்டன் பதவி என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது திடீரென ஹர்திக் நடுவில் வந்துள்ளார். இதனால் பும்ரா கோபமடைந்து இந்த பதிவை போட்டுள்ளார். இதனால், மும்பை இந்தியன்ஸ் ஒரே குடும்பமாக செயல்படவில்லை. அது பிளவுபட்டுள்ளது என்று கூறுகின்றனர்.


மேலும், மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வ பக்கத்தை பும்ரா ஃபாலோ செய்யவில்லை. இதன் காரணமாக பும்ரா வேறு அணிக்கு செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியை பும்ரா பின்தொடர்கிறார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்ல பும்ரா விருப்பம் காட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.