ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷி குறித்தது தான். ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.


அதோடு மில்லியன் கணக்கான பாலோயர்ஸ்களை கொண்ட மீம்ஸ் பக்கங்களும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷியை நக்கலடித்து வருகின்றன. இது ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் படியாக இருக்கிறது. ரசிகர்கள் மற்றும் மீம்ஸ் பக்கங்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் நியாயமானது தானா? இல்லை அது வன்மம் நிறைந்ததா? என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்:


அதீத நம்பிக்கையாளன் ஹர்திக் பாண்டியா:


ஹர்திக் பாண்டியா போட்டியின் போது எதிர்கொள்ளும் சவால்களை தனக்கு சாதகமாக மாற்ற முடியும் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டவர். அந்தவகையில் தான் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு (2022)  ஐ.பி.எல் கோப்பையை வென்று கொடுத்தவர். அடுத்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் அந்த அணிக்கு இரண்டாம் இடத்தை பெற்றுக்கொடுத்தவர்.


இதன் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பினார். முன்னதாக, ஹர்திக் பாண்டியாவை முதன் முதலில் ஐ.பி.எல் போட்டிக்காக ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி தான். கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுக வீரராக 21 வயதில் களம் களம் கண்டவர் ஹர்திக் பாண்டியா. அவரை ரூபாய் 10 லட்சம் என்ற அடிப்படை விலையில் மும்பை அணி எடுத்தது.




ஆல் ரவுண்டர் வீரர் என்பதால் இந்திய அணிக்கும் இவரின் தேவை இருந்தது. இதன்பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், அதே ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளிலும், 2017 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானவர். இதனிடையே 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடினார். 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் குஜராத் அணியில் விளையாடினார்.


குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அந்த அணியை வெற்றிகரமாக அழைத்துச் சென்றதால் ஹர்திக் பாண்டியாவின் மீது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பார்வை திரும்பியது. இச்சூழலில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது மும்பை. அந்தவகையில் இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.


விமர்சனமா? வன்மமா?


மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா வழிநடத்திய இரண்டு போட்டிகளிலும் அந்த அணி தோல்வி அடைந்து இருக்கிறது. முன்னதாக, குஜராத் அணிக்கு எதிராக முதல் போட்டியில் முதல் ஓவரை பும்ரா வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது முதல் ஓவரை வீசினார் ஹர்திக் பாண்டியா. மும்பை அணியின் கேப்டனாக அவர் எடுத்த முதல் முடிவு அதுதான். அவர் செய்தது தவறுதான்.


உலகத்தரமான ஒரு பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. அவரை அணியில் வைத்துக்கொண்டு அவருக்கு முதல் ஓவர் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா முதல் ஓவர் வீசியது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. அதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரை வீசியவர் மபாகா. முதல் ஓவரில் இருதே ஹைதராபாத் அணி ரன் வேட்டையை தொடங்கி விட்டது.


அதன்படி நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும்  ஹர்திக் பாண்டியா எடுத்த எல்லா முடிவுகளுமே தவறாகத்தான் அமைந்தது. அதேநேரம் ஒரு கேப்டனாக எப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் தான். இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து விட்டது மும்பை அணி என்பதால் ஹர்திக் மீது ரசிகர்கள் சேற்றை வாரி வீசுவது ஏற்புடையதாக இருக்காது. விமர்சனங்கள் நியாமானது தான் ஆனால் அவர் மீது இப்போது வைக்கப்படுவது விமர்சனங்களை தாண்டி வன்மாக மாறி வருகிறது.


விமர்சிக்கும் ரசிகர்கள்:


மைதானத்திற்குள் நுழைந்த நாயை ஹர்திக் என்று சொல்லி கிண்டலடிப்பது, ஹர்திக் பாண்டியா எப்படி ரோகித் சர்மாவிற்கு ஆர்டர் போடாலம் என்பது, தலையில் ஊத நிற பேண்ட் மாட்டி இருப்பதை மோசமான வார்த்தைகளால் கிண்டல் செய்வது, பாரபரப்பான நேரங்களில் பாசிட்டிவ் ஆட்டிடீயூட்டுன் இருப்பதை கீழ்த்தரமாக  ஒருமையில் பேசுவது  எல்லாம் வன்மத்தின் உச்சம்.


இதை கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆதேநேரம் தனக்கு எதிராக உருவாக்கபடும் கட்டமைப்புகளை முறியடித்து அணிக்கு வெற்றியை தேடித்தரவேண்டிய முக்கியப் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிற்கு இருக்கிறது. நட்சத்திர வீரர்களை தனது அணியில் கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியா முள் மீது நடப்பது போல் தான் இருக்கிறார். அவர் எழுச்சி பெறுவாரா? இல்லை வீழ்வாரா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.