ஐபிஎல் ஃபீவர் இந்தியா முழுவதும் மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டே வருகின்றது. களமிறங்கவுள்ள 10 அணிகளும் தங்களது அணி நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது. 


மும்பை அணியுடன் இணைந்த ஹர்திக்:


இதில் ஐபிஎல் வரலாற்றில் முதலில் ஐந்து முறை கோப்பையை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை முற்றிலும் புது ஐடியாவோடு களமிறங்குகின்றது. மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிற்கு பதிலாக இம்முறை ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்குகின்றது. 


இந்நிலையில் கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா ஐபிஎல் போட்டியில் களமிறங்க தன்னை தயார் படுத்திவந்தார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துடன் இன்று அதாவது, மார்ச் மாதம் 11ஆம் தேதி இணைந்தார். 






இதுதொடர்பான வீடியோவை மும்பை அணி தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஹர்திக் பாண்டியா மும்பை அணி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கடவுள் படத்திற்கு பூசை செய்து தேங்காய் உடைத்து வழிபாடு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


ஐபிஎல்-இல் தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றது. இதில் மிகவும் முக்கியமான அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். மிகவும் பலம் வாய்ந்த அணியாக ஐபிஎல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் கோப்பையை கடந்த 2013ஆம் ஆண்டுதான் வென்றது. அதன் பின்னர் 2015, 2017, 2019 மற்றும் 2020 என இதுவரை 5 முறை கோப்பைகளை வென்றுள்ளது. இந்த கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் வென்றது.


இதுமட்டும் இல்லாமல் ஐபிஎல்-இல் ஒருசில அணிகள் எல்லாம் இன்னும் ஒரு கோப்பை கூட வெல்லாத நிலையில் மும்பை அணி முதல் அணியாக 5 கோப்பைகளை வென்றது. இதுமட்டும் இல்லாமல் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியுள்ளார். மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது என்றால் கோப்பையில் மும்பை அணியின் பெயரை தாராளமாக பொறித்துவிடலாம், எனும் அளவிற்கு அரக்கத்தனமாக மும்பை அணி விளையாடும். 


உண்மையிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் என்பது மும்பை அணியின் கோர் டீம்.  மும்பை அணியின் தற்போதைய கோர் டீம் என்றால் ரோகித், பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா.