ஐ.பி.எல். தொடரில் லக்னோ மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன் குஜராத் அணியும், லக்னோ அணியும் மோதின. வலுவான பவுலிங்கை வைத்துள்ள லக்னோவும், நல்ல பேட்டிங் ஆர்டர் வைத்துள்ள குஜராத் அணியும் மோதுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


அடுத்தடுத்து விக்கெட்:


இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி ஸ்டோய்னிஸ் மற்றும் பூரண் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் – சுப்மன்கில் ஆட்டத்தை தொடங்கினர்.


சுதர்சன் அதிரடியாக ஆட கில் நிதானமாக ஆடினார். பவர்ப்ளேவின் கடைசி பந்தில் நிதானமாக ஆடிய கில் அவுட்டானார். அவர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து அனுபவமிக்க வில்லியம்சன் வந்த வேகத்தில் 1 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சாய் சுதர்சன் அவுட்டானார்.


சொதப்பிய மிடில் ஆர்டர்:


குருணல் பாண்ட்யா பந்தில் சுதர்சன் 23 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய புதிய விக்கெட் கீப்பர் சரத் 2 ரன்னில் அவுட்டானார். நல்கண்டேவும் 12 ரன்களில் ஆட்டமிழக்க 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து குஜராத் தடுமாறியது.


அப்போது, விஜய் சங்கர் – ராகுல் திவேதியா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாகவும், ஏதுவான பந்துகளை அடித்தும் ஆடினர். கடைசி 6 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 72 ரன்கள் தேவைப்பட்டது. விஜய் சங்கர் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார். அடுத்து வந்த ரஷீத்கான் அடித்து ஆட ஆசைப்பட்டு டக் அவுட்டானார். 7 விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் குஜராத்திடம் இருந்து பறிபோனது.


5 விக்கெட்டுகளை அள்ளிய யஷ்:


குஜராத்தின் கடைசி நம்பிக்கையாக ராகுல் திவேதியா மட்டுமே ஆடினார். டெயிலண்டரான உமேஷ் யாதவ் 2 ரன்னில் அவுட்டானார். ராகுல் திவேதியா மட்டும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி தனி ஆளாக குஜராத் வெற்றிக்காக போராடினார். கடைசி 18 பந்துகளில் குஜராத் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது. நவீன் உல் ஹக் வீசிய 18வது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே குஜராத்திற்கு கிடைத்தது.


கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட முயற்சித்த ராகுல் திவேதியா யஷ் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். திவேதியா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் 18.5 ஓவர்களில் குஜராத் அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லக்னோ அணியில் யஷ் தாக்கூர் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


முதன்முறை:


மேலும் ஐ.பி.எல். வரலாற்றில் குஜராத் அணியை லக்னோ அணி முதன்முறையாக வீழ்த்தியுள்ளது. இதுவரை இரு அணிகளும் மோதிய 4 போட்டிகளில் குஜராத்தே வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்று நடந்த 5வது மோதலில் லக்னோ வெற்றி பெற்றுள்ளது.