நடப்பு ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்திய அணிகளான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இறுதிப் போட்டியில் இன்று மோதுகின்றது. இந்த இரு அணிகளில் ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியுடன் மோதிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கொல்கத்தா அணி குறித்த தனது எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். 




மிகவும் காயப்படுத்தியது:


அதில், “ கொல்கத்தா அணி உலகத்திலேயே மிகவும் பலமான அணியாக இருந்தது. ஆனாலும் எங்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது எனக்கு புரியவேயில்லை. இதுமட்டும் இல்லாமல், எனக்கு இப்போதும் நினைவில் இருக்கின்றது. அந்த காலகட்டம் மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியதாக இருந்தது. தலை சிறந்த வீரர்கள் இருந்தாலும் கொல்கத்தா அணியின் மீதான விமர்சனங்கள் மிகவும் கடுமையாக இருந்தது. அதில் எனது மனதை மிகவும் காயப்படுத்திய கருத்து, கொல்கத்தா அணியினரின் கிட்டுகள் மிகவும் சிறப்பாக உள்ளன.


ஆனால் அவர்களின் ஆட்டம் சிறப்பாக இல்லை என மோசமாக விமர்சித்தனர். இது என்னை மிகவும் காயப்படுத்தியது. ஆனால் இதையெல்லாம் கவுதம் கம்பீர் அணிக்குள் மீண்டும் வந்த பின்னர் மாற்றியுள்ளார். அவரது வருகையால் அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கம்பீர் ஏற்கனவே இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். தற்போது அவரது வழிகாட்டலில் கொல்கத்தா அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறினார். 








இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கொல்கத்தா அணி நடப்புத் தொடரில் 14 லீக் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் இரண்டு போட்டிகள் மழையால் தடைபட்டதால் இரண்டு போட்டிகள் மட்டும் டாஸ் போடப்படாமலே கைவிடப்பட்டது. இதனால், கொல்கத்தா அணி 12 லீக் போட்டிகளில் விளையாடியது. இதில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது மட்டும் இல்லாமல் 18 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தினைப் பிடித்தது.