சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தது. அப்போது, பேசிய தினேஷ் கார்த்திக் தனது ஓய்வு குறித்து பேசியிருந்தார். 


ஆர்.சி.பி. பினிஷர் தினேஷ் கார்த்திக்:


ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டுபிளிசி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணி, 11. 4 ஓவர்களில் 78 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது, உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் - அனுஜ் ராவத்துடன் கூட்டணி அமைத்து பெங்களூர் அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினார். 


26 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 38 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டிக்கு பிறகு தினேஷ் கார்த்திக் தனது ஓய்வு குறித்து பேசினார். தற்போது அது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


என்ன சொன்னார் தினேஷ் கார்த்திக்..?


உங்கள் ஓய்வு குறித்து தொடர்ந்து பேச்சுகள் வருகிறதே தினேஷ் கார்த்திக்கிற்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இதுதான் கடைசி போட்டியா? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், “ நான் மீண்டும் சேப்பாக்கத்திற்கு வந்து பிளே ஆஃப் விளையாடுவேன் என்று நம்புகிறேன். அப்படி அது நடக்கவில்லை என்றால் இந்த ஸ்டேடியத்தில் இதுதான் எனது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும்.” என்று தெரிவித்தார். 


இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லவில்லை என்றால் சேப்பாக்கத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என்பதை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெளிவாக கூறியுள்ளார். 






ஐபிஎல் 2024ன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக அனுஜ் ராவத் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் எடுத்திருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திர 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். சிஎஸ்கே அணியில் சிவம் துபே முக்கிய பங்கு வகித்தார். அவர் 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 


இந்த சீசனின் ஆரஞ்சு கேப் பட்டியலில் அனுஜ் ராவத் முதலிடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேசமயம் பர்பிள் கேப் பட்டியலில் சிஎஸ்கேயின் முஸ்தாபிசுர் ரஹ்மான் முதலிடத்தில் உள்ளார். ஆர்சிபிக்கு எதிராக முஸ்தாபிசுர் 4 ஓவர்களில் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேமரூன் கிரீன் பர்பிள் கேப் பட்டியலில் 2 விக்கெட்கள் எடுத்ததன் மூலம் இரண்டாவது இடத்தில் உள்ளார்.