டெல்லி கேப்பிட்டல் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மெக்கார்க் நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனையை படைத்துள்ளார். 


அதாவது நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான பல வீரர்களில் டெல்லி அணியின் மெக்கர்கும் ஒருவர். இவர் இதுவரை டெல்லி அணிக்காக இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அதில் மொத்தம் 309 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 அரைசதங்கள் விளாசியுள்ளார். இந்த நான்கு அரைசதங்களில் மூன்று அரைசதங்களை 20 பந்துகளுக்கும் குறைவாக எட்டியுள்ளார். 


அதாவது இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள மெக்கர்க் தனது முதல் ஆட்டத்தில் 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். அடுத்த போட்டியில் 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். மூன்றாவது போட்டியில் 18 பந்துகளில் 65 ரன்கள் குவித்திருந்தார். நான்காவது போட்டியில் 14 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்திருந்தார். அதேபோல் ஐந்தாவது போட்டியில் வெறும் 27 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். அடுத்த போட்டியில் 7 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார். அதேபோல் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டி 20வது பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். 


இதன் மூலம் மெக்கர்க் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4 அரைசதம் விளாசியுள்ளார். அதில் 3 அரைசதங்கள் 20 பந்துகளுக்கும் குறைவான பந்துகளை எதிர்கொண்டு அரைசதத்தினை எட்டினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் தனது அறிமுக தொடரில் மூன்று அரைசதங்களை 20 பந்துகளுக்கு குறைவாக விளாசுவது இதுவே முதல்முறை என்பதால், இந்த புதிய சாதனையை மெக்கர்க்  தன்வசப்படுத்தியுள்ளார். 


மொத்தம் 131 பந்துகளை எதிர்கொண்டு 309 ரன்கள் குவித்துள்ள மெக்கர்க் இதில் 30 பவுண்டரிகளும் 26 சிக்ஸர்களும் பறக்கவிட்டுள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 235.87ஆக உள்ளது. இவரது ஆவரேஜ் ஸ்கோர் 44.14ஆகவும் உள்ளது. அதிகப்படியான இளம் வீரர்களைக் கொண்டுள்ள டெல்லி அணிக்கு மெக்கர்க் மிகச்சிறந்த பலமாக திகழ்கின்றார்.