17வது ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஆறவது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி டெல்லி அணியின் சொந்த மைதானமான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது அணி பந்து வீசும் என அறிவித்தார். அதன்படி டெல்லி அணியின் இன்னிங்ஸை இளம் வீரர்களான மெக்கர்க் மற்றும் போரல் தொடங்கினர். களமிறங்கியது முதல் மெக்கர்க் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இதனை அறிந்து கொண்ட அபிஷேக் போரல் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 


ஆட்டத்தின் 4வது ஓவரினை ராஜஸ்தான் அணியின் மோசின் கான் வீசினார். அந்த ஓவரினை முழுவதுமாக எதிர்கொண்ட மெக்கர்க் அந்த ஓவரில் 4 பவுண்டரியும் இரண்டு சிக்ஸரும் விளாசி அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் குவித்தார். மேலும் இவர் 19 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். 


அடுத்த ஓவரில் தனது விக்கெட்டினை மெக்கர்க் இழக்க, அடுத்து வந்த சாய் ஹோப் தனது விக்கெட்டினை எதிர்பாராத விதமாக இழந்து வெளியேறினார். இதற்கடுத்து களத்திற்கு அக்‌ஷர் பட்டேல் வந்தார். தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் போரல் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டார். 


ஆட்டத்தின் 10வது ஓவரில் அக்‌ஷர் பட்டேலும், 13வது ஓவரில் போரலும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த பண்ட் தனது விக்கெட்டினை சஹால் பந்தில் இழந்து வெளியேறினார். 


இதன் பின்னர் ஸ்டப்ஸ் மற்றும் குல்பைதின் நைப் இணைந்து டெல்லி அணிக்கு அதிரடியாக ரன்கள் குவித்தனர். ஆட்டத்தின் 19வது ஓவரில் இவர்கள் கூட்டணி பிரிந்தது. ஆனால் இவர்கள் கூட்டணி 29 பந்தில் 45 ரன்கள் சேர்த்திருந்தது. 


கடைசி 6 பந்துகள் இருக்கும்போது டெல்லி அணியின் இம்பேக்ட் ப்ளேயர் ரசின் களமிறங்கினார். இவர் தான் எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டினை இழந்து 221 ரன்கள் சேர்த்தது.