17ஆவது ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும் மோதிக்கொண்டது. இந்தப் போட்டி டெல்லி அணியின் சொந்த மைதானமான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் சேர்த்தது. 


அடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களம் இறங்கியது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை இழக்க பவர் பிளேவின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜாஸ் பட்லர் தனது  விக்கெட்டினை இழந்தார். பவர் பிளேவுக்குள் ராஜஸ்தான் அணி 67 ரன்கள் சேர்த்திருந்தாலும் தொடக்க வீரர்களை இழந்தது. 


அடுத்து கை கோர்த்த சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பிராக் 11 ஓவர்கள் வரை விக்கெட்டினை இழக்காமல் சிறப்பாக விளையாடி வந்தனர். பதினோராவது ஓவரின் கடைசி பந்தில் ரியான் பிராக் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் 22 பந்தில் 27 ரன்கள் சேர்த்து நிலையில் ரசீத் சலாம் பந்தில் தனது விக்கட்டினை இழந்தார். களம் இறங்கியது முதல் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் தனது அரை சதத்தினை எட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து வந்த சஞ்சு டெல்லி அணியின் அனைத்து வீரர்களையும் மைதானத்தின் நாலாபுறமும் ஓடவிட்டார். 


ராஜஸ்தான் கேப்டன் சஞ்சுவின் விக்கெட் வீழ்த்த டெல்லிய அணி தன்னிடமிருந்த அனைத்து பவுலர்களையும் பயன்படுத்தி பார்த்தது. ஆனால் இதற்கு உடனடியாக பலன் கிடைக்கவில்லை. ஒருபுறத்தில் சஞ்சு அதிரடியாக விளையாட மறுபுறத்தில் ஆடிக்கொண்டிருந்த சுபம் தூபே நிதானமாகவே ரன்கள் சேர்த்தார்.






சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் சிக்ஸர் விளாச தூக்கி அடித்த பந்தை எல்லைக் கோட்டிற்கு அருகில் இருந்த ஷாய் ஹோப் சிரமப் பட்டு பிடித்தார். களநடுவர் முடிவை மூன்றாவது நடுவரிடம் விட, மூன்றாவது நடுவர் அவுட் என அறிவித்தார். ஆனால் ஷாய் ஹோப்பின் கால் லேசாக எல்லைக்கோட்டில் பட்டதை ராஜஸ்தான் அணியினர் சுட்டிக்காட்டினர். ஆனால் 46 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் வெளியேறவேண்டி இருந்தது. 


சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டினை இழந்த பின்னர் ஆட்டம் மெல்ல மெல்ல டெல்லி அணியின் கட்டுக்குள் கொண்டு வந்தது. அடுத்து வந்த ஃபெராராரியா மற்றும் அஸ்வின் தங்களது விக்கெட்டினை சொற்ப ரன்களில் இழந்தனர்.  இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.