உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேன் தோனி தான் என்று சி.எஸ்.கே பயிற்சியாளர் பாலாஜி கூறியுள்ளார்.


ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது ஐபிஎல் சீசன் 17. அந்தவகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் 41 போட்டிகள் முடிந்துள்ளன. இன்று 42 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில்  இருக்கிறது. 


சக்திவாய்ந்த பேட்ஸ்மேன் தோனி:


இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜி, “உலகிலேயே மிக சக்தி வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேன் தோனி தான்” என்று கூறியுள்ளார்.


 இது தொடர்பாக அவர் பேசுகையில், "இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வலைப் பயிற்சிக்கு முன்பு வரை அவர் பேட்டை கூட தொடவில்லை. தோனி வேறு எந்த கிரிக்கெட் தொடர்களிலும் ஆடவில்லை. ஆனாலும், ஐபிஎல் தொடருக்கு சரியாக தன்னை தயார் செய்து கொண்டுள்ளார். அவர் நீண்ட நேரம்  பயிற்சி செய்கிறார்.


அதில் அதிரடியாக ஷாட் அடிப்பதே அவரது முக்கிய பயிற்சியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளைப் பார்க்கும் போது தோனி அதிக சக்தி வாய்ந்த பேட்ஸ்மேனாக மாறி இருக்கிறார். அதாவது உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேனாக மாறி இருக்கிறார். வேறு எந்த பேட்ஸ்மேனும் அவருக்கு அருகில் கூட வர முடியாது" என்று கூறியுள்ளார்.


முன்னதாக இந்த ஐபிஎல் சீசனில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது சென்னை அணி. இந்த போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்து இருந்தாலும் எம்.எஸ்.தோனியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது. அதாவது 16 பந்துகள் களத்தில் நின்ற தோனி 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 37 ரன்களை விளாசி இருந்தார்.


அதேபோல், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார் எம்.எஸ்.தோனி. இந்த போட்டியில் ஆறாவது வீரராக களம் இறங்கிய அவர் வெறும் 4 பந்துகளில் 3 சிக்ஸர்களை விளாசி 20 ரன்கள் எடுத்தார்.


கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த போட்டியில்    கடைசி 9 பந்துகளுக்கு களம் இறங்கிய தோனி 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 28 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தான் விளையாடி போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் எம்.எஸ்.தோனி.