ஐபிஎல் தொடர் என்றால் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்பு ஐபிஎல் ரசிகர்கள் அனைவருக்கும் இருக்கும். இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி. மகேந்திர சிங் தோனி சென்னை அணியின் கேப்டனாக ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். 


எம்.எஸ்.தோனி:


இப்படி இருக்கும்போது நடப்புத் தொடரில் இருந்து சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அணியில் ஒரு வீரராக தொடர்ந்து வருகின்றார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகின்றார். கடந்த சீசனே தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் எனக் கூறப்பட்ட நிலையில், இந்த சீசனில் வீரராக விளையாடி வருகின்றார். இதுமட்டும் இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோனியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ நான் எனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னையில்தான் விளையாடுவேன்” எனக் கூறியிருந்தார். 


நடப்பு சீசனில் சென்னை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி அதில் 6 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி தனக்கு மீதமுள்ள மூன்று லீக் போட்டுகளில் வெற்றி பெற்றால் எந்தவித சிரமும் இல்லாமல் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 






டக் அவுட்டான தோனி:


இந்நிலையில் சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடியுள்ளது.  இதில் தோனி 9 போட்டிகளில் பேட்டிங் செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். இதன் மூலம் தோனி மொத்தம் 110 ரன்கள் சேர்த்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 37.  இதில் அவர் களமிறங்கிய முதல் 7 ஆட்டங்களில் தனது விக்கெட்டினை இழக்காமல் விளையாடினார். ஆனால் கடைசி இரண்டு போட்டிகளில் தனது விக்கெட்டினை இழந்துள்ளார். இந்த இரண்டு போட்டிகளும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகத்தான். முதலில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் தோனி, 11 பந்தில் 14 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆனார். 

அதேநேரத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான அடுத்த போட்டியிலும் தோனி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோனி தனது விக்கெட்டினை இழந்ததையே தோனி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் தோனி தான் எதிர்கொண்ட முதல் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி டக் அவுட் ஆகி வெளியேறினார். 


ப்ரீத்தி ஜிந்தா ரியாக்‌ஷன்:


தோனி கோல்டன் டக் அவுட் ஆவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தோனி டக் ஆனதால் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளான பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.