நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது. களமிறங்கியுள்ள 10 அணிகளும் தங்களது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் கவனிக்கப்படும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் உள்ளது. அதற்கு காரணம், இந்த இரு அணிகளும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டது. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர் இரு அணிகளின் கேப்டன்களும் மாற்றப்பட்டனர். குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு ட்ரேட் செய்யப்பட்டதால், தற்போது குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுகின்றார். அதேபோல் சென்னை அணிக்கு 14 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனி தன்னிடம் இருந்த கேப்டன்சியை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார். இரு அணிகளும் இளம் கேப்டன்கள் தலைமையிலும், புதிய கேப்டன்கள் தலைமையிலும் மோதவுள்ளதால் இந்த போட்டியின் மீது ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.
இரு அணியின் கேப்டன்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது. அது குறித்து இங்கு விரிவாக காணலாம். இரு அணியின் கேப்டன்களும் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்துதான் கேப்டனாக அணியை வழிநடத்துகின்றனர். இருவரும் தங்களது அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனகளாக களமிறங்குவர். இருவரும் கேப்டனாக தங்களது முதல் போட்டில் மிகப்பெரிய அணிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும், குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று மோதவுள்ளது.
அதேபோல், இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடியது. இரண்டாவது போட்டியில் சென்னை அணி தனது சொந்த மைதானத்திலேயே குஜராத் அணியை எதிர்கொள்கின்றது. அதேபோல் சென்னை அணி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை அதன் சொந்த மைதானமான அகமதாபாத் மைதானத்தில் மோதி, சென்னை அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் சென்னை அணியை இன்றைய போட்டியில் குஜராத் அணி வெல்ல அனைத்து முயற்சிகளையும் எதிர்கொள்ளவுள்ளது.
இவர்கள் இருவரும் தலா ஒரு ஆண்டு ஆரஞ்சு நிற தொப்பி வென்றுள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட் 2021ஆம் ஆண்டு 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிறத் தொப்பியை வென்றது மட்டும் இல்லாமல் அணி கோப்பை வெல்லவும் காரணமாக இருந்தார். அதேபோல் சுப்மன் கில் கடந்த ஆண்டு 890 ரன்கள் குவித்து குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு வர முக்கிய காரணமாக இருந்தார். இரு அணிகளின் கேப்டன்களும் எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்கக்கூடியவர்கள் என நம்பப்படுவதால் இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில்லின் ஆட்டத்தினை மட்டும் இல்லாமல் அவர்கள் அணியை எவ்வாறு வழிநடத்துகின்றார்கள் என்பதை அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களும் நுணுக்கமாக கவனிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.