17வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி முதல் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. களமிறங்கியுள்ள 10 அணிகளும் முந்தய சீசனைப் போல்  மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடி, புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 


இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 26ஆம் தேதி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் தனது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டனஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 


சென்னை அணியும் குஜராத் அணியும் கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தி அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல், ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. 


புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடிக்க வாய்ப்பு


இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் சென்னை அணி இரண்டாவது இடத்திலும், குஜராத் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதிக்கொள்வதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் வரை அதாவது 28ஆம் தேதிவரை முதல் இடத்தில் கட்டாயம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 28ஆம் தேதி நடைபெறும் போட்டியில் டெல்லி அணி வென்று, ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவினால், 29ஆம் தேதி வரை முதல் இடத்தில் இருக்கும்  வாய்ப்பினைப் பெறவும் வாய்ப்புள்ளது. 


இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 2 முறையும் குஜராத் அணி மூன்று முறையும் வென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று களமிறங்குகின்றது. 


ஜடேஜாவுக்கு மரியாதை


சென்னை அணி தனது சொந்த மைதானத்தில் இந்த போட்டிக்குப் பின்னர் ஏப்ரல் 8ஆம் தேதிதான் மீண்டும் களமிறங்கும் என்பதால் ரசிகர்கள் இந்த போட்டியைக் காண மைதானத்தில் குவிந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு ஐபில் இறுதிப் போட்டியில் மேட்ச் வின்னிங் ஆட்டத்தினை வெளிப்படுத்தி  சென்னை அணி 5வது கோப்பை வெல்ல காரணமாக இருந்த ஜடேஜாவுக்கு சென்னை அணி ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி(விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்


குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில்(கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், உமேஷ் யாதவ், மோகித் சர்மா, ஸ்பென்சர் ஜான்சன்