ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்த வகையில் விறுவிறுப்பாக தொடங்கிய இந்த சீசனில் 6 லீக் போட்டிகள் இதுவரை நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.


அதே நேரம் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை 2 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இனிவரும் போட்டிகளில் தங்களது வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்க உள்ளன.


இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. அதன்படி, இரண்டு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. முக்கியமாக இளம் கேப்டன்களாக இந்த சீசனில் களம் கண்ட ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன்கில் ஆகியோர் தங்களது அணிகளை வெற்றி பெற வைத்துள்ளனர்.


குஜராத் அணியில் 5 தமிழ்நாட்டு வீரர்கள்:


இச்சூழலில் இன்றைய போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான செய்தி உள்ளது. அதாவது சென்னையை மையமாகக் கொண்டு விளையாடி வரும் சி.எஸ்.கே அணியில் எந்த ஒரு தமிழ்நாட்டு வீரர்களும் இடம்பெறவில்லை. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணியில் 5 தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.






அந்தவகையில், சாய் சுதர்சன், சாய் கிஷோர், விஜய் சங்கர், ஷாருக்கான் மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் குறைந்தது மூன்று வீரர்கள் இன்றைய போட்டியில் பிளேயிங் 11ல் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சேப்பாக்கம் மைதானம் இவர்களுக்கு நன்றாக பழக்கப்பட்ட மைதானம் என்பதால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இன்றைய போட்டி சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆனால்,வார்த்தைக்கு வார்த்தை சென்னை என்று கூறும் சி.எஸ்.கேவில் ஒரு தமிழ்நாட்டு வீரர்கள் கூட இடம்பெறாதது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது. தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு சி.எஸ்.கே வில் வாய்ப்பு அளிக்கலாம் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இனிவரும் சீசனிலாவது சி.எஸ்.கேவில் தமிழ்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


மேலும் படிக்க: IPL 2024 Ruturaj Gaikwad: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக கடைசி 5 போட்டிகள்...ருதுராஜ் கெய்க்வாட் செய்த தரமான சம்பவம்!


மேலும் படிக்க: Ravindra Jadeja: குஜராத் அணிக்கு எதிரான போட்டி...ஜடேஜாவுக்கு ரசிகர்கள் கொடுக்கப்போகும் இன்ப அதிர்ச்சி!