CSK SWOT Analysis IPL 2024: ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை சாதித்தது என்ன? சாதிக்க காரணங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் 2024:
இந்தியாவில் ஒவ்வொரு கோடை காலத்திலும் தவிர்க்க முடியாத, விளையாட்டு திருவிழாவாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் பெரும் பணம் புரளும் விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல், இதுவரை 16 சீசன்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
தொடக்கத்தில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றன. நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றின் ஆகச் சிறந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், இதுவரை இந்த தொடரில் சாதித்தது என்ன? அதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி:
இதுவரை நடந்து முடிந்த 16 ஐபிஎல் சீசன்களில் 14ல் சென்னை அணி விளையாடியுள்ளது. அந்த அனைத்து சீசன்களிலும் மகேந்திர சிங் தோனி தான், அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ள அந்த அணி, அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை மும்பையுடன் பகிர்ந்துகொள்கிறது. அதே நேரம், வேறு எந்தவொரு அணியும் செய்யாத வகையில், 5 முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
12 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஒவ்வொரு தொடரிலும் குறைந்தபட்ச பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும் என்பது, சென்னை ரசிகர்களுக்கான மினிமம் கேரண்டி ஆக தொடர்கிறது. சென்னை அணிக்காக இதுவரை 3 வீரர்கள் ஒரு தொடரில் அதிக ரன் சேர்த்ததற்கான ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளனர். இதேபோன்று ஒரு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான பர்ப்பிள் தொப்பியை 4 சென்னை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
தோனி எனும் ஆளுமை:
ஐபிஎல் தொடர் என்றாலே அனைவரது நினைவுக்கும் மஞ்சள் உடை அணிந்த சென்னை அணி கட்டாயம் நினைவுக்கு வரும். அப்படி வரும்போது முதல் நபராக நீங்கள் காண்பது கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆக தான் இருப்பார். தனது தலைமைப் பண்பால் எவராலும் நிகழ்த்த முடியாத, செய்வதற்கறிய பல சாதனைகளை தோனி களத்தில் நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொரு நொடியும் யோசித்து சூழலுக்கு ஏற்ப நுணுக்கமான முடிவுகளை செய்து, அணியின் வெற்றிக்கு தேவையானதை செய்வதில் கைதேர்ந்தவர்.
தோல்வியின் விளிம்பிக்கே சென்று விட்டாலும், தனிநபராக முட்டி மோதி அணியை வெற்றி பெறச் செய்யும் வல்லமை கொண்டவர். தோனி எனும் நபர் களத்தில் இருக்கும் வரை, வெற்றி நமக்கானது இல்லை என எதிரணியினரையே அச்சம் கொள்ள செய்யும் அசகாய சூரர். சென்னை அணி உடல் என்றால் அதன் உயிராக இருப்பதே தோனி தான். அவரை தவிர வேறு எந்த ஒரு நபர் கேப்டனாக இருந்து இருந்தாலும், சென்னை அணி 5 கோப்பைகளை வென்று இருக்குமா? என்று கேட்டால், இல்லை என்பதே பலரின் பதிலாக இருக்கும்.
சென்னை அணியின் பலம்:
உலக தரத்தில் கடும் போட்டி நிலவும் ஒரு தொடரில், 5 முறை சென்னை அணி கோப்பையை வென்றது என்றால், அதற்கு முக்கிய காரணம், தனது வீரர்கள் மீது அந்த அணி வைத்துள்ள நம்பிக்கை தான். மற்ற அணிகளில் ஓரிரு போட்டிகளில் சரியாக செயல்படாவிட்டாலே, வீரர்கள் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுவார்கள். ஆனால், சென்னை அணியில் எந்தவொரு வீரருக்கும் அப்படி நிகழாது. ஒவ்வொரு வீரரின் தனிப்பட திறன் என்ன, அவர்களது பங்களிப்பு அணிக்கு எப்படி, எந்த நேரத்தில் தேவைப்படும் என்ற ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பிளேயிங் லெவன் கட்டமைக்கப்படும்.
ஒவ்வொரு வீரரிடமிருந்தும் தனக்கு என்ன தேவை என்ற புரிதலை, கேப்டன் தோனி தெளிவாக முன்வைக்கிறார். மற்ற அணிகளை போன்று ஏலத்தில் ஸ்டார் பிளேயர்களை சென்னை அணி குறிவைக்காது. தங்களது பெரும்பாலான போட்டிகள் சென்னையில் நடைபெறுவதால், அந்த மைதானத்தின் தன்மைக்கு பொருந்தக்கூடிய வீரர்களையே தேர்வு செய்து ஏலத்தில் எடுப்பர். பிளேயிங் லெவனில் சரியான கலவையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெறுவார்கள். இவர்கள் இக்கட்டான சூழலில், இளம் வீரர்கள் மீது அழுத்தம் குவிவதை தவிர்ப்பதில் பெரும் பங்காற்றுகின்றனர். தொழில்நுட்ப ரீதியாக எதிரணியினரை அலசி ஆராய்வதோடு, போட்டியின் சூழலுக்கு திட்டத்தை மாற்றி வெற்றி வாகை சூடுவதிலும் சென்னை அணி கைதேர்ந்தது.
சென்னை அணியின் பலவீனம்:
சென்னை அணியின் பலமாக கருதப்படும் வீரர்கள் மீதான நம்பிக்கை தான், அந்த அணிக்கு பெரும் பலவீனமாக அமைகிறது. மோசமான ஃபார்மில் உள்ள சில வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதன் மூலமும், அந்த அணி அவ்வப்போது தோல்விகளை சந்தித்துள்ளது. தோனி எனும் ஆணி வேர் இல்லாவிட்டால், சென்னை அணியே எளிதில் ஆட்டம் காணும் என்பது ஊரறிந்த உண்மை. சுழற்பந்து வீச்சில் வலிமையாக இருந்தாலும், பல நேரங்களில் வேகப்பந்து வீச்சு சென்னை அணிக்கு பாதகமாகவே அமைந்துள்ளது.
தொடக்க வீரர்களாக களமிறங்குபவர்கள், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய நபர்களாக இல்லை. இதுவும் கடந்த தொடரில் சென்னை அணியின் முக்கிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. மூத்த வீரர்களையே ஏலத்தில் எடுப்பது விமர்சனங்களை சந்தித்தாலும், அந்த முடிவு சென்னை அணிக்கு களத்தில் அணிக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்தியதில்லை.
மொத்தத்தில் சென்னை அணி எப்படி?
ஒட்டுமொத்தத்தில் சென்னை அணியில் குறிப்பிடத்தக்க சில குறைபாடுகள் இருந்தாலும், அதை அனைத்தையும் மறைத்து அணிக்கான வெற்றியை தோனியால் பெற்று தர முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால், நடப்பு தொடரில் தோனி முழுமையாக விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. இதனால், தோனி இல்லாவிட்டால் அந்த அணியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.