கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 


திணறிய கொல்கத்தா:


கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு நடந்து வரும் 16வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று வரும் நிலையில் அவ்வப்போது சத்தமே இல்லாமல் பல சாதனைகள் படைக்கப்பட்டும் வருகிறது. இதனிடையே இன்று நடக்கும் 56வது போட்டியில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதின. 


கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட் செய்த கொல்கத்தா அணியில் இம்பேக்ட் பிளேயராக வந்த வெங்கடேஷ் ஐயர் மட்டும் அதிகப்பட்சமாக 57 ரன்களை விளாசினார். 20 ஓவர்களில் அந்த அணி  8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் அதிகப்பட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போல்ட் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் ஷர்மா மற்றும் கே.எம்.ஆசிஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 


யுஸ்வேந்திர சாஹல் சாதனை


இந்நிலையில் ராஜஸ்தான் அணி வீரர் ஐபிஎல் வரலாற்றில் சூப்பரான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை 142 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒட்டுமொத்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சாக 40/5 என்பது உள்ளது. நான்கு விக்கெட்டுகளை அவர் 6 முறை வீழ்த்தியுள்ளார். ஒரே முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


முன்னதாக 161 போட்டிகளில் ஆடி 183 விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை அணி வீரர் ட்வைன் ப்ராவோ முதலிடத்தில் இருந்தார். அவரை யுஸ்வேந்திர சாஹல் பின்னுக்கு தள்ளியுள்ளார்.  3வது இடத்தில் 174 விக்கெட்டுகளுடன் மும்பை வீரர் பியுஸ் சாவ்லா உள்ளார். 4வது இடத்தில் லக்னோ வீரர் அமித் மிஸ்ரா 172 விக்கெட்டுகளுடனும், 5வது இடத்தில் 171 விக்கெட்டுகளுடன் ராஜஸ்தான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் உள்ளனர். 


மேலும் படிக்க: Fastest 50 IPL History: 13 பந்திலே 50 ரன்கள்.. ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம்..! புதிய சாதனை படைத்த ஜெய்ஸ்வால்..!