ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்(Yashasvi Jaiswal) குறைந்த பந்துகளில்  அதிவேக அரைசதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். 


நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 55 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் குஜராத் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுள்ளது. சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் கிட்டதட்ட உறுதியாகி விட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான போட்டி பிற அணிகளுக்கிடையே மிகத் தீவிரமாக உள்ளது. 


இப்படியான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் தொடரின் 56வது ஆட்டத்தில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் அதிகப்பட்சமாக 57 ரன்கள் எடுத்தார். பிற பேட்மேன்ஸ்கர் பெரிதாக ரன் குவிக்க தவறினர். 


பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் அதிகப்பட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதனைத் தொடர்ந்து பேட் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே ரன் குவிக்க தொடங்கியது. 


முதல் ஓவரை கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா வீச அதனை ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிர்கொண்டார். அந்த ஓவரில் 6 பந்துகளையும் எதிர்கொண்டு பவுண்டரி, சிக்ஸர்கள் சேர்த்து 26 ரன்களை குவித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களையும் வெளுத்தெடுத்த ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதுவே ஐபிஎல் வரலாற்றில் குறைவான பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசதமாகும். 


முன்னதாக பஞ்சாப் அணி சார்பில் கே.எல்.ராகுல், பேட் கம்மின்ஸ் கொல்கத்தா அணி சார்பிலும் விளையாடிய போது 14 பந்துகளில் அரைசதம் அடித்தனர். இதேபோல் யுசுப் பதான் (கொல்கத்தா), சுனில் நரைன் (கொல்கத்தா), நிக்கோலஸ் பூரன் (லக்னோ) ஆகியோர் 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.