ஐபிஎல் தொடரில் நேற்று சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடியது. இந்த போட்டியின்போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் லெவல் 1 குற்றத்தை கோலி செய்தார். லெவல் 1 நடத்தை விதிகளை மீறினார், போட்டியின் நடுவர்கள் முடிவே இறுதியானது. இந்த குற்றத்தை கோலியும் ஒப்புக்கொண்டார்.” என தெரிவித்தது. 


இந்த அறிக்கையில் கோலியின் நடத்தை விதிகளை மீறியதாக கூறப்பட்டாலும், சம்பவம் பற்றிய எந்த விவரத்தை பிசிசிஐ வெளியிடவில்லை. ஆனால், சென்னை அணி பேட்ஸ்மேன் சிவம் துபே அவுட்டாகி வெளியேறியபோது, கோலி ஆக்ரோதமாக கொண்டாடியதாக கூறப்படுகிறது. இதற்காக கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கலாம். 


சென்னை அணிக்கு எதிராக 17வது ஒவரில் பெங்களூர் பந்துவீச்சாளர் வெய்ன் பார்னெல், சிவம் துபேவுக்கு புல்லர் டெலிவரி ஒன்றை வீசினார். அதுவரை நின்று அதிவேகமாக ரன்களை குவித்த துபே, லாங் - ஆன் திசையில் அடிக்க முடிந்து முகமது சிராஜிடம் கேட்சானார். பெங்களூர் அணிக்கு அது மிகப்பெரிய விக்கெட்டாக பார்க்கப்பட்டது. அப்போது, இந்த விக்கெட்டை கோலி உற்சாகமாக கொண்டாடி, சில வார்த்தைகளை பேசியதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே பிசிசிஐ விராட் கோலிக்கு அபராதம் விதித்ததாக தெரிகிறது. 


சென்னை- மும்பை போட்டி சுருக்கம்: 


டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கான்வே மற்றும் சிவம் துபே அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. 






227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர். பெங்களூர் அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வல் 76 ரன்களும், ஃபாப் டு பிளிசி 62  ரன்களும் எடுத்திருந்தனர். 


புள்ளி பட்டியல்:


ஐபிஎல் 2023 தொடரின் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, இரண்டு தோல்வியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது.