ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய 7வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதியது.
இதில், முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக டேவிர் வார்னர் 37 ரன்களும், அக்ஸார் பட்டேல் 36 ரன்களும் எடுத்திருந்தனர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான விருதிமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய விருதிமான் சஹா 7 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 14 ரன்கள் சேர்த்து நோர்ட்ஜே பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில்லும் அதே 14 ரன்கள் எடுத்து இருந்தபோது, நோர்ட்ஜே பந்துவீச்சில் போல்டானார். தொடர்ந்து உள்ளே வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, வெறும் 5 ரன்களில் கலீல் அகமது பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, குஜராத் அணி 54 ரன்களை சேர்த்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி, மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்ஷனுடன் இணைந்து குஜராத் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
களமிறங்கியது முதலே சாய் சுதர்ஷன் நிதான ஆட்டத்தை வெளிபடுத்த விஜய் சங்கர் அவ்வபோது பவுண்டரிகளை விரட்டினார். இந்த ஜோடி 39 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 12வது ஓவரில் குஜராத் அணி 100 ரன்களையும் கடந்தது. 29 ரன்கள் எடுத்து இருந்தபோது விஜய் சங்கர் மிட்சல் மார்ஷ் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் அவுட்டானர். இந்த ஜோடி 4வது விக்கெட்டிற்கு 53 ரன்களை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாய் சுதர்ஷன் 44 பந்துகளில், ஐபிஎல் வரலாற்றில் தனது இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் களமிறங்கிய மில்லர் அதிரடியாக 16 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்து குஜராத் அணி வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம்போன சாய் சுதர்சன்:
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜாரத் டைட்டன்ஸ் அணி, சாய் சுதர்சனை அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு குஜராத் அணி இக்கட்டான நிலைமையில் இருந்தபோது அரைசதம் அடித்து மீட்டுகொடுத்தார்.
இந்தநிலையில், கடந்த மாதம் ஐபிஎல் தொடரை போன்று டிஎன்பிஎல் ஏலம் சென்னையில் ஏலம் எடுத்தது. அப்போது சாய் சுதர்சனை ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் கடுமையாக போட்டியிட்டது. அப்போது, இறுதியாக லைகா கோவை கிங்ஸ் சாய் சுதர்சனை 21.6 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.
டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்கும் ஒரு அணியானது ஏலத்தில்ம் 70 லட்சம் வரைதான் செலவு செய்ய வேண்டும். அப்படி இருக்கும் சூழ்நிலையில் கூட சாய் சுதர்சனை 21 லட்சத்திற்கு ஏலம் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம் டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரிமீயர் லீக்) தொடரில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக சாய் சுதர்சன் புதிய சாதனை படைத்தார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட சாய் சுதர்சன் ஐபிஎல் ஏலத்திலேயே அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்குதான் ஏலம் போனார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வேளையில் டிஎன்பிஎல் தொடரில் 21 லட்சத்திற்கு அதிக தொகைக்கு சென்று அனைவரையும் ஆச்சரியப்பட செய்தார். இதன்மூலம், சாய் சுதர்சனின் திறமை என்ன என்று நம் அனைவருக்கும் புரியும்.
சாய் சுதர்சன் கிரிக்கெட் வாழ்க்கை:
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி மும்பை அணிக்கு எதிரான சாய் சுதர்சன் அறிமுகமானார். அதை தொடர்ந்து இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 சதம் 2 அரைசதம் உள்பட 664 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், இதுவரை 20 டி20 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 581 ரன்கள் எடுத்துள்ளார்.
நேற்றைய போட்டியை போல் சாய் சுதர்சன் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், விரைவில் இந்திய அணியில் ஒரு அங்கமாக அமைய அதிக வாய்ப்புள்ளது. மேலும், இவரது திறமை குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டினர்.