ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இந்த சீசனில் 2வது முறையாக பலப்பரீட்சை நடத்துகிறது. 


கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் கிரிக்கெட் திருவிழாவின் பல போட்டிகள் இறுதிவரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது.  பிளே ஆஃப் சுற்றுக்கு யார் யார் செல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கணிக்க முடியாத அளவில் உள்ளது. கிட்டதட்ட 4 அணிகள் 10 புள்ளிகளுடன் 4 இடத்துக்கு போட்டியிட்டுள்ளது. 


இப்படியான நிலையில் இன்று நடக்கும் 48வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தானில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. 


இந்த சீசனில் இதுவரை...
 
நடப்பு சீசனில் குஜராத் அணி 10 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதேபோல் ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடம் 4வது இடத்தில் உள்ளது. 


பிளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பு?


ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்


குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவாடியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோஸ்வா லிட்டில் 


மைதானம் எப்படி? 


ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 49 போட்டிகள் நடந்துள்ளன. இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 32 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி அதிகப்பட்சமாக 202 ரன்களை எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி குறைந்த ஸ்கோரை (92 ரன்கள்) பதிவு செய்துள்ளது.


அதேசமயம் சவாய் மான்சிங் மைதானத்தில் இந்த இரு அணிகளும் முதல்முறையாக நேருக்கு நேர் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ் வென்ற கேப்டன் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.