ஐபிஎல் போட்டிகான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும் நடப்புச் சாம்பியன் குஜராத்  டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொள்ளவுள்ளன.  இந்த போட்டி மார்ச் மாதம் 31-ஆம் தேதி அஹமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

  தோனியின் கடைசி சீசன் என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. 


மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கும் இந்த சீசனின் லீக் போட்டி, மே மாதம் 21 ஆம் தேதி முடியவடையவுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் கோப்பைக்காக விளையாடவுள்ளன. இந்த 10 அணிகளும், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இரு குழுக்களில் உள்ள அணிகள், தனது சொந்த குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறையும், மாற்றுக் குழுவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும் மோதவுள்ளது. 


அதேபோல் ஒவ்வொரு அணியும் லீக் போட்டியில் மட்டும் 14 போட்டிகள் விளையாடவுள்ளன. இதில் டாப் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், அதாவது, ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அடுத்தடுத்த சுற்றின்  முடிவுகளின் அடிப்படையில் போட்டியும் அணிகளும் நகரும். 


இதுவரை 15 சீசன்கள் நடைபெற்றுள்ளது. அதில் அதிகபட்மாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பைகளை வென்றுள்ளது. அதாவது. 2013,2015,2017,2019,2020 ஆகிய சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது. இந்த ஐந்து முறையும் மும்பை அணியை வழிநடத்தியதால், அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையையும் ரோகித் ஷர்மா பெற்றுள்ளார். 


இதற்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இந்த அணி மொத்தம் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. நான்கு முறையும் கேப்டனாக தோனியே இருந்துள்ளார். இந்த அணி 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 


இதற்கு அடுத்து, 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்த இரு முறையும் கம்பீர் கொல்கத்தா அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதன் பின்னர் பார்த்திக் கொண்டால், ஐபிஎல் போட்டியின் தொடக்க சீசனில் அதாவது 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது. அதன் பின்னர் இந்த அணி கோப்பையை வெல்லவில்லை. 


அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் அணி கோப்பையை வென்றது. ஆனால் அந்த அணி தற்போது ஐபிஎல் போட்டியில் இல்லை. 


அதேபோல், 2016ஆம் ஆண்டு சன் ரைசஸ் ஹைதராபாத் அணியும், 2022ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியும் கோப்பையை வென்றுள்ளது. குஜராத் அணிதான் நடப்புச் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.