ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.


வார்னர் அவுட்:



ஐதராபாத் அணி நிர்ணயித்த 198 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. நடப்பு தொடர் முழுவதும் டெல்லி அணியின் பேட்டிங் தூணாகா உள்ள கேப்டன் வார்னர், ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இது டெல்லி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


மார்ஷ் - சால்ட் கூட்டணி:


இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் மற்றும் சால்ட் கூட்டணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டது. சீரான இடைவெளியில் ஐதராபாத்தின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக மாற்ரியது. இந்த ஜோடியை பிரிக்க ஐதராபாத் அணி எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியை சந்தித்தன. சால்ட் 29 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இதனால் இந்த கூட்டணி 100 ரன்களை சேர்க்க, 10 ஓவர்களிலேயே டெல்லி அணி 100 ரன்களை கடந்தது. இதைதொடர்ந்து, மிட்ஷெல் மார்ஷும் 28 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.


மார்கண்டேயா அசத்தல்:


59 ரன்கள் எடுத்து இருந்தபோது சால்ட் அடித்த பந்தை, பந்தை வீசிய மார்க்ண்டேஎ அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.அவரை தொடர்ந்து வந்த மணீஷ் பாண்டே வெறும் ஒரு ரன்னில் நடையை கட்டினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 63 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் 6 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும். 


அடுத்தடுத்து விக்கெட்:


இளம் வீரரான பிரியம் கர்க்கும்  12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இம்பேக்ட் பிளேயராக வந்த சர்ப்ராஸ் கானும் 9 ரன்களை மட்டுமே சேர்ந்த்து , நடராஜன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.  இவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி திணறியது. சிறப்பாக பந்துவீசிய மார்கண்டே 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


ஐதராபாத் வெற்றி:


இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, நடப்பு தொடரில் ஏற்கனவே டெல்லியிடம் பெற்ற தோல்விக்கு பழிவாங்கியது. நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும்.


முதல் இன்னிங்ஸ்:


 அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நடப்பு தொடரில் ஏற்கனவே பெற்ற தோல்விக்கு பழிவாங்கும் நோக்கில் ஐதராபாத் அணி இந்த போட்டியில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த திரிபாதியும் 10 ரன்களை சேர்த்து இருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 


அபிஷேக் அதிரடி:


மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா, டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் வெறும் 25 பந்துகளிலேயே அரைசதம் கடந்து அசத்தினார். இதனிடையே, மார்க்ரம் 8 ரன்களிலும், ப்ரூக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து 67 ரன்களை சேர்த்து இருந்தபோது அபிஷேக் சர்மாவும் ஆட்டமிழந்தார். 


நிதான ஆட்டம்:


6-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சமாத் மற்றும் கிளாசென் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதேநேரம், சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களையும் விளாசியது. இந்த கூட்டணி 53 ரன்களை சேர்த்தபோது, சமாத் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.  மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கிளாசென், டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதன் மூலம் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். ஐபிஎல் தொடரில் அவர் விளாசிய முதல் அரைசதம் இதுவாகும். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளாசென், 27 பந்துகளில் 53 ரன்களை குவித்தார். 


டெல்லி அணிக்கு இலக்கு:


இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 197ரன்களை சேர்த்தது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால், டெல்லி அணியால் 198 ரன்கள் என்ற இலக்கை அடைய முடியாமல் தோல்வியை தழுவியது.