ஐபிஎல் தொடரை நாள்தோறும் கவனித்துக்கொண்டு வருபவர்கள் கூட கொஞ்சம் ஆச்சரியத்துடன் தான் கேட்பார்கள், ஐபிஎல் தொடர் தனது இறுதி கட்டத்தை எட்டிவிட்டதா என. ஆமாம் அதுதான் உண்மை. ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 69வது லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் தான் அந்த அணியால் ப்ளேஆஃப் தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலையில் களமிறங்கியது.
தொடக்கத்தில் அதிரடியாக ஆடி இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஹைதர்பாத் அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.
மும்பை அணியின் இஷான் கிஷன் தனது விக்கெட்டை 14 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய க்ரீன் தான் எதிர் கொண்ட முதல் இரண்டு பந்துளை பவுண்டரிக்கு விளாசி தனது வருகையை வான்கடேவுக்கு அறிவித்தார். அதன் பின்னர் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி வந்தது ரோகித் க்ரீன் ஜோடி. இவர்களது கூட்டணியை பிரிக்க கிடைத்த வாய்ப்புகளை தவற விட்ட ஹைதராபாத் அணிக்கு தண்டனையாக இருவரும் ஆடி வந்தனர். அதிரடியாக ஆடிய க்ரீன் 20 பந்துகளில் அரைசதத்தினை எட்டினார்.
இவருக்கு அடுத்த படியாக ரோகித் தனது அரைசத்தினை எட்ட அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்து வெற்றி இலக்கை நோக்கி வேகமாக உயர்ந்தது. தொடக்க வீரராகவும் கேப்டனாகவும் கட்டாய வெற்றி பெற வேண்டிய முக்கியமான போட்டியில் பொறுப்புடன் ஆடி வந்த ரோகித் சர்மா 37 பந்தில் 56 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 148 ரன்களாக இருந்தது. ரோகித் க்ரீன் கூட்டணி 65 பந்தில் 128 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ஆட மும்பை அணிக்கு வெற்றி எளிதானது.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. மும்பை அணியின் சார்பில் கேமரூன் க்ரீன் 47 பந்தில் 100 ரன்கள் சேர்த்தது அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.