IPL 2023 MI vs SRH: ஐபிஎல் தொடரை நாள்தோறும் கவனித்துக்கொண்டு வருபவர்கள் கூட கொஞ்சம் ஆச்சரியத்துடன் தான் கேட்பார்கள், ஐபிஎல் தொடர் தனது இறுதி கட்டத்தை எட்டிவிட்டதா என. ஆமாம் அதுதான் உண்மை. ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 69வது  லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் தான் அந்த அணியால் ப்ளேஆஃப் தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலையில் களமிறங்கியது. 


அதன் படி ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை மயங்க் அகர்வாலும், விவ்ராந்த்தும் தொடங்கினர். இருவரும் முதல் ஓவர் மட்டும் சற்று நிதனத்துடன் ஆடினர். முதல் ஓவரிலேயே ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொண்ட அவர்கள் அதன் பின்னர் மும்பை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பவர்ப்ளேவின் இறுதியில் 50 ரன்களைக் கடந்த ஹைதராபாத் அணி, ஓவருக்கு தவறாமல் ஒன்றோ அல்லது இரண்டு பவுண்டரிகள் விளாசி வந்தனர். தூக்கி ஆட வேண்டாம் என்ற முடிவில் இருந்த இந்த தொடக்க ஜோடி பவுண்டரிகள் மீது மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தது. போட்டியின் எட்டாவது ஓவரை வீசிய பியூஷ் சாவ்லாவின் முதல் பந்தில் தான் போட்டியின் முதல் சிக்ஸர் விளாசப்பட்டது. 


இவர்களது சிறப்பான ஆட்டத்தால் ஹைதராபாத் அணி ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன்ரேட்டை சீராக வைத்திருந்தது. முதலில் விவ்ராந்த் தனது அரைசதத்தினை எட்ட, அதன் பின்னர் மயாங்க் அகர்வால் தனது அரைசதத்தினை எட்டினார். இவர்களது பார்ட்னர்ஷிப்பை எப்படி பிரிப்பது என தெரியாமல் மும்பை அணி பந்து வீச்சாளர்கள் இருந்தனர். 


ஒரு கட்டத்தில் 13.5வது ஓவரில் மும்பை அணியின் பந்து வீச்சளார் மாத்வால் பந்து வீச்சில் விவ்ராந்த் 69 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் அப்போது ஹைதராபாத் அணி 140 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் களத்துக்கு வந்த ஹெண்ட்ரிச் க்ளாசன் சிறப்பாக கை கொடுக்க ஹைதராபாத் அணியின் ரன்ரேட் சீராக முன்னேறியது. 46 பந்தில் 83 ரன்கள் சேர்த்த நிலையில் மாத்வால் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 


அதன் பின்னரும் ஹைதராபாத் அணி அதிரடியாக ஆட  முயற்சி செய்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5  விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி சார்பில் மாத்வால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.