ஐபிஎல் தொடரில் டெல்லி  அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஆரம்பமே அதிர்ச்சி:


ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 200 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்து தொடக்க வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா, ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே டக்-அவுட் ஆனார். அவரை தொடர்ந்து வந்த மணீஷ் பாண்டேவும் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல், அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால், முதல் ஓவரின் முடிவில் ரன் ஏதும் எடுக்காமலேயே டெல்லி அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


போராடிய வார்னர்:


அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் கேப்டன் வார்னர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். 29 ரன்களை சேர்த்தபோது, குறைந்த போட்டிகளில் ஐபிஎல் தொடரில் 6000 ரன்களை பூர்த்தி செய்த வீரர் என்ற பெருமையை வார்னர் பெற்றார். இதனிடையே, ரிலீ ரோஸ்ஸோ 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.


4வது விக்கெட்டிற்கு வார்னர் உடன் ஜோடி சேர்ந்த லலித் யாதவ், நிதானமாக ஆடினார். இந்த ஜோடி 64 ரன்களை சேர்த்தது.  38 ரன்கள் சேர்த்து இருந்த போது லலித் யாதவ் போல்ட் பந்துவீச்சில் போல்டானார். அக்சர் படேல் மற்றும் ரோமன் போவல் ஆகியோர் தலா 2 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனிடையே,  கேப்டன் வார்னர் 44 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து 65 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். இதனால், டெல்லி அணியால் குறிப்பிட்ட இலக்கை எட்டமுடியவில்லை.


ராஜஸ்தான் அபார வெற்றி:


 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து, 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் போல்ட் மற்றும் சாஹல் தலா 3 விக்கெட்டுகளையும், அஷ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.


 


முதல் இன்னிங்ஸ்:


போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து,  ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக போட்டியின் முதல் ஓவரிலேயே ஜெய்ஷ்வால் 5 பவுண்டரிகளை விளாசி அதகளம் செய்தார். இதன் மூலம் 25 பந்துகளிலேயே அரைசதம் விளாசினார். தொடர்ந்து 31 பந்துக்ளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 60 ரன்கள் சேர்த்து இருந்தபோது, கேட்ச் முறையில் அவுட்டானார். சக தொடக்க ஆட்டக்காரரான பட்லரும் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் அரைசதம் விளாசினார்.


அடுத்தடுத்து விக்கெட்டுகள்:


ஜெய்ஷ்வாலை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த பராக் 7 ரன்களில் நடையை கட்டினார்.


டெல்லி அணிக்கு ரன்கள் இலக்கு:


அடுத்து வந்த ஹெட்மேயர் அதிரடியாக விளையாடி 39  ரன்களை சேர்த்தார். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய பட்லர், 51 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட 79 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை சேர்த்தது.