ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ராஜஸ்தான் அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


டாஸ் வென்ற ராஜஸ்தான்:


ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில்,  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.


ஜெய்ஷ்வால் - பட்லர் அதிரடி:


ராஜஸ்தானின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஷ்வால் - பட்லர் கூட்டணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக ஜெய்ஷ்வால் ருத்ரதாண்டவம் ஆடினார். மறுமுனையில் நிதானமாக விலையாடி வந்த பட்லர், 18 ரன்கள் சேர்த்து இருந்தபோது பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். இந்த கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 72 ரன்களை சேர்த்தது. 


அடுத்தடுத்து விக்கெட்:


மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார். ஆனாலும், வெறும் 14 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல்லும், வெறும் 2 ரன்களை மட்டுமே சேர்த்து சாவ்லா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அதேநேரம், ஜெய்ஷ்வால் மட்டும் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசி வந்தார். மறுமுனையில் ஜேசன் ஹோல்டர் வெறும் 11 ரன்களில், ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


ஜெய்ஷ்வால் அபார சதம்:


சீரான இடைவெளியில் ராஜஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்தாலும், ஜெய்ஷ்வால் மட்டும் நிலைத்து நின்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் வெறும் 53 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதனிடையே, , ஹெட்மேயர் வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஜுரெலும் வெறும் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அபாரமாக விளையாடி வந்த ஜெய்ஷ்வால் 124 ரன்களை சேர்த்து இருந்தபோது, அர்ஷத் கான் பந்துவீச்சில் காட் & போல்ட் முறையில்  ஆட்டமிழந்தார். இதில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். 


மும்பை அணிக்கான இலக்கு:


இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை சேர்த்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரை தொடர்ந்து,  பியூஷ் சாவ்லா  2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேநேரம், அந்த அணி எக்ஸ்ட்ராக்களாக மட்டும் 26 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதை தவிர்த்து இருந்தால், மும்பை அணி ராஜச்தானை இன்னும் குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தி இருக்கலாம். இதையடுத்து, ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 213 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணி எட்டிப்பிடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.