ஐபிஎல் சீசனின் 37 வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சவாய் மன்சிங் மைதானத்தில் விளையாடி வருகிறது. 


முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர். 


என்ன வெறியில் ஜெய்ஸ்வால் உள்ளே வந்தாரோ தெரியவில்லை. தொடக்கம் முதலே கிடைத்த பந்துகளை வெளுக்க தொடங்கினார். ஆகாஷ் சிங் வீசிய முதல் ஓவரின் முதல் 4 பந்துகளில் ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகளை விரட்ட, மறுமுனையில் பட்லரும் பந்துகளை பிரித்து மேய்ந்தார். இதன்மூலம், ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 7 ஓவர்களில் 75 ரன்களை கடந்தது. 


தொடர்ந்து அதிரடியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பட்லர், ஜடேஜா வீசிய 9 வது ஓவரில் சிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து 27 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் விக்கெட் விழுந்தாலும் கருணை காட்டாது அரைசதம் கடந்து ஜெய்ஸ்வால், பந்துவீச்சாளர்களில் பந்துகளை நொறுக்கி கொண்டு இருந்தார். 


ராஜஸ்தான் ராயல்ஸ் 125 ரன்களில் இருந்தபோது கேப்டன் சஞ்சு சாம்சன் 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்தில் கேட்சானார். தொடர்ந்து அதே ஓவரில் 43 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து உள்ளே வந்த சிம்ரன் ஹெட்மயர் 8 ரன்களில் வெளியேற, துருவ் மற்றும் மற்றும் படிக்கல் அடிக்க தொடங்கினர். 



துஷார் தேஷ்பாண்டே வீசிய 19 வது ஓவரில் துருவ் ஜூரல் தலா ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரியை பறக்க விட, கடைசி ஓவர் வீசிய பதிரணா பந்திலும் ஜீரல் சிக்ஸர் மற்றும் பவுண்டரியை பறக்க விட்டார். தொடர்ச்சியாக அடுத்த பந்து வைடுடாக விழுந்தபோது ஜூரல்  ரன் எடுக்க முயன்று ரன் அவுட்டானார்.  படிக்கல் தன் பங்கிற்கு 4 பவுண்டரி மற்றும் ரன்கள் ஓட, 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.