ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் குவித்திருந்தார்.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். பேட்டிங் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 பந்துகளில் வெறும் 3 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
சர்ச்சையான ரோகித் சர்மா விக்கெட்:
பிறந்த நாளில் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா, ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா வீசிய நக்கிள் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அந்த பந்தை தவறாக கணித்த ரோகித் சர்மா, அதிவேகமாக ஆடினார். மெதுவாக ஸ்விங் ஆகி வந்த பந்து ஆஃப்-ஸ்டம்பின் மேல் முத்தமிட்டது போல் தொட்டு பைஸ்ஸை கீழே தள்ளியது. இதனால் அவுட் என்ற முறையில் ரோகித் சர்மா வெளியேற, அப்போதிருந்து ட்விட்டரில் எண்ணற்ற ட்விட்டர் வாசிகள் ரோகித் சர்மா உண்மையிலேயே அவுட்டானாரா என்று விவாதம் செய்து வருகின்றனர்.
அதில், ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனின் கையுறையில் (கிளவுஸ்) பட்டுதான் பிறகு ஸ்டம்புகளில் பட்டது என தெரிவித்து வருகின்றனர்.
மும்பை வெற்றி:
இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி, பொறுப்புடன் விளையாடி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டது. கேமரூன் கிரீன் சீரான இடைவெளியில் பவுண்டரி மற்ரும் சிக்சர்களை விலாசினார். இதன் மூலம் இந்த கூட்டணி 62 ரன்களை எடுத்திருந்தபோது, 28 ரன்கள் சேர்த்து இருந்தபோது அஷ்வின் பந்துவீச்சில் இஷான் கிஷன் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்சர் அடித்து, அதிரடியாக தொடங்கினார். இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த கேமரூன் கிரீன் 44 ரன்கள் சேர்த்து இருந்தபோது, அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகளை தொடர்ந்து, சுழற்பந்துவீச்சை கொண்டு மும்பை அணிக்கு ராஜஸ்தான் அணி கடும் நெருக்கடி கொடுத்தது.
13வது ஓவரில் இருந்து அதிரடி காட்ட தொடங்கிய திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி, பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாச, கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணி வெற்றி பெற 32 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா, வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதையடுத்து, கடைசி ஓவரில் மும்பை வெற்றி பெற 17 ரன்கள் தேவையாக இருக்க, ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் டேவிட் சிக்சராக விளாச19.3 மும்பை அணி அபார வெற்றி பெற்றது.