இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, டி-20 போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டும் இரண்டாவது வீரர் இவர் ஆவார்.
11,000 ரன்களை கடந்த ரோகித்:
கடந்த 11 சீசன்களாக மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா, நடப்பு தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 56 ரன்களை எடுத்து அசத்தினார். அதேநேரம், டி-20 வரலாற்றில் புதிய மைல்கல்லையும் எட்டியுள்ளார். அதன்படி, இந்த போட்டியில் 40 ரன்களை சேர்த்தபோது டி-20 போட்டியில் 11 ஆயிரம் ரன்களை கடந்தார். அதோடு, மும்பை அணிக்காக 5000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் பெருமையையும் அவர் தனதாக்கியுள்ளார்.
2வது இந்திய வீரர்:
சர்வதேச அளவில் 11 ஆயிரம் ரன்களை கடந்த ஏழாவது வீரர் ரோகித் சர்மா. அதேநேரம், கோலியை தொடர்ந்து டி-20 போட்டியில் 11 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரரும் ரோகித் சர்மா தான். இந்த பட்டியலில் 14 ஆயிரத்து 562 ரன்களுடன், மேற்கிந்திய தீவுகள் வீரர் கெயில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
11000 ரன்களை கடந்த வீரர்கள்:
01. கிறிஸ் கெயில்
02. சோயப் மாலிக்
03. கேரன் பொல்லார்ட்
04. டேவிட் வார்னர்
05. ஆரோன் பின்ச்
06. கோலி
07. ரோகித் சர்மா
மும்பை அணிக்கு 5000 ரன்கள்:
ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே விளையாடி வரும் ரோகித் சர்மா, முதல் 3 சீசன்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். அதைதொடர்ந்து, கடந்த 2011ம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அதோடு, 2013ம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக கேப்டனாக செயல்பட்டு, இதுவரை 5 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில், மும்பை அணிக்காக மட்டும் 5000 ரன்களை குவித்துள்ளார். முன்னதாக பெங்களூரு அணிக்காக கோலியும், சென்னை அணிக்காக ரெய்னவும் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். முன்னதாக ஐபிஎல் தொடரில் 6000 ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற சாதனையையும், நடப்பு தொடரில் ரோகித் சர்மா எட்டினார்.
தகுதி பெறுமா மும்பை அணி?
இதனிடயே, நடப்பு தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேநேரம், தனது பிளே-ஆஃப் வாய்ப்பை இதுவரை உறுதி செய்யவில்லை. தொடட்ந்து இன்று நடைபெற உள்ள இரண்டாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்று நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால், ரன் ரேட் அடிப்படையில் பிளே-ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறும். ஒரு வேளை பெங்களூரு அணி தோல்வியுற்றால், நான்காவது அணியாக மும்பை பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறும்.