Rishabh Pant in IPL:  டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ரிஷ்ப் பண்ட் குஜராத் அணிக்கு எதிரான போட்டியை காண மைதானத்துக்கு வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியின் முதல் போட்டியில் ரிஷப் பண்ட்டின் ஜெர்ஸி டெல்லி அணியின் கேலரியில் வைக்கப்பபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.   


டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் டெல்லி அணிக்காக இளம் வீரர் அபிஷேக் போரேல் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ளார். டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்பண்ட் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக டெல்லி அணிக்கு கடந்த போட்டியில் சர்ப்ராஸ் கான் விக்கெட்கீப்பராக செயல்பட்டார்.


கடந்த வருடம் டிசம்பர் 30-ம் தேதி டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பண்ட் காரில் அவரே ஓட்டிக்கொண்டு தனியாக பயணித்த போது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானார். ரூர்கி அருகே நடந்த இந்த விபத்தில், கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகவும், வலது முழங்காலில் தசைநார் கிழிந்ததாகவும், வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. முதுகில் சில சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. 


மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, கிரிக்கெட் உலகையே உலுக்கியது. பல வீரர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ந்தனர். இன்றுவரை எல்லா போட்டிகளிலும் அவருக்கான இடம் நிரப்படாமல் உள்ளது. நிரப்ப முடியாமல் திணறி வருகிறது இந்திய அணி, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில். இடையில் வந்து இறங்கி மளமளவென பவுண்டரிகளை, சிக்ஸர்களை விளாசும் அவரது டெஸ்ட் அதிரடியை அவருக்குப் பின் இன்னும் யாரும் அடிக்கவில்லை. 


சிகிச்சைகள் முடிந்து வீட்டுக்கு திரும்பிய அவர், தற்போது காயத்தில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறார். அவர் களம் திரும்ப ஓராண்டு காலம் ஆகும் என கூறப்படும் நிலையில் அவரின் வருகையை எதிர்பார்க்காத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை. அவரும் தன்னை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு அவரது உடல்நிலை அப்டேட்டை தெரிவிப்பார். இந்நிலையில் அவர் மைதானத்திற்கு நேரடியாக வந்திருப்பதை டெல்லி அணியைப் போல் டெல்லி அணி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.