ஐ.பி.எல். தொடரின் 9வது போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் இன்று நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களும், மன்தீப்சிங் டக் அவுட்டாகியும், கேப்டன் நிதிஷ் ராணா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய குர்பாஸ் 57 ரன்களில் அவுட்டாக கொல்கத்தா அணி 11 ஓவர்களில் 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஷர்துல் - ரிங்குசிங்:
அப்போது, ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூரும், பேட்ஸ்மேன் ரிங்கு சிங்குவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து மைதானத்தின் நாலாபுறம் பந்துகளை சிதறவிட்டனர். குறிப்பாக, ஷர்துல் தாக்கூர் சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசினார். அவரது அதிரடியால் கொல்கத்தா ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது.
பேட்டிங்கில் மிரட்டிய ஷர்துல் தாக்கூர் அரைசதம் விளாசினார். அவருக்கு பக்கபலமாக நின்ற ரிங்குசிங்கும் தானும் எதற்கும் சளைத்தவர் என்பது போல சிக்ஸரையும், பவுண்டரிையும் விளாசினார். 89 ரன்களில் சேர்ந்த இந்த ஜோடி 192 ரன்களில்தான் பிரிந்தது. 33 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 46 ரன்கள் சேர்ந்த ரிங்குசிங் ஹர்ஷல் படேல் பந்தில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
103 ரன்கள் பார்ட்னர்ஷிப்:
இருவரும் இணைந்து 6வது விக்கெட்டிற்கு 103 ரன்கள் சேர்த்தனர். கொல்கத்தா அணியின் பலமிகுந்த பேட்ஸ்மேன்களான வெங்டேஷ் ஐயர், மன்தீப்சிங், நிதிஷ் ராணா, சிக்ஸர் மன்னன் ரஸல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும் ஷர்துல் தாக்கூர் – ரிங்குசிங் ஜோடியின் அதிரடியால் கொல்கத்தா பெங்களூர் அணிக்கு 205 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்தது. பெங்களூர் அணிக்காக 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 ஓவர்களில் 7 ஒயிட், 1 நோபாலுடன் 44 ரன்களை வாரி வழங்கினார்.
ஷர்துல் தாக்கூர் இதுவரை 77 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 249 ரன்களை எடுத்துள்ளார். அதில் இன்று விளாசிய அதிரடி அரைசம் அடங்கும். பந்துவீச்சிலும் சிறந்த வீரரான ஷர்துல் 82 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஷர்துல் தாக்கூருக்கு பக்கபலமாக அதிரடி காட்டிய ரிங்குசிங் 19 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 301 ரன்களை எடுத்துள்ளார்.
மேலும் படிக்க: RCB vs KKR IPL 2023: பொளந்து கட்டிய ஷர்துல் தாக்கூர், ரிங்கு சிங்.. பெங்களூரு அணிக்கான இலக்கு இதுதான்?
மேலும் படிக்க: KKR vs RCB IPL 2023: 'பாவம் அவரே கன்ப்யூஸ் ஆயிட்டாரு..' டாசை வென்றது யாரென்று தெரியாமல் குழம்பிய மேட்ச் ரெஃபரி..!