ஐபிஎல் தொடர் தொடங்கி விட்டாலே ஒற்றுமையாக இருக்கும் நண்பர்கள் கூட்டம் கூட தங்களது அணிக்காக சண்டையிட்டுக்கொள்வார்கள். காரணம் தங்களுக்கு பிரியமான கிரிக்கெட் வீரர் எந்த அணியில் விளையாடுகிறாரோ அந்த அணிக்கு சப்போர்ட் செய்து பேசி சண்டையிட்டுக் கொள்வார்கள். அதில் மிகவும் குறிப்பாக அவர்களின் பிரியமான வீரர்கள் இதுவரை படைத்துள்ள சாதனைகளை விளக்கித்தான் அந்த சண்டைகளும் இருக்கும். ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தான். இவற்றில் இன்று (ஏப்ரல், 17) ஐபிஎல் போட்டியின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கபடும் சென்னை - பெங்களூரு அணிகள் மோதிக் கொள்கின்றன.
இந்த போட்டியின் மீது அதிக ஆவல் ஏற்பட காரணம் சென்னை அணியின் கேப்டன் தோனியும், பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனும் (கடந்த ஆண்டு முதல் பெங்களூரு அணியை டூ பிளசிஸ் வழிநடத்தி வருகிறார்) தற்போது அணியில் வீரராக உள்ள விராட் கோலியும் தான். இந்த ஆண்டு தான் தோனி விளையாடும் இறுதி ஐபிஎல் என கூறப்படுவதால், இன்று நடக்கவுள்ள போட்டி இருவரும் கடைசியாக களத்தில் மோதிக் கொள்ளும் போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
டாஸ்
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிள்சிஸ் பந்து வீச முடிவு செய்துள்ளார்.
நடப்பு ஆண்டு தொடரைப் பொறுத்தவரையில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளன. இதையடுத்து ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 6வது இடத்தையும் பெங்களூரு அணி 7வது இடத்தையும் பிடித்துள்ளது. சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியை சந்தித்தது. பெங்களூரு அணி கடைசியாக பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் விளையாடிய போட்டியில், டெல்லி அணிக்கு எதிராக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10 போட்டிகளில் மட்டுமே பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், சென்னை அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவும் எதுவும் எட்டப்படவில்லை. குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் கோடை காலங்களில் வரும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் இதுவரை 11 முறை இந்த அணிகள் மோதியுள்ள நிலையில், அதில் ஒரு முறை மட்டுமே சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியுள்ளது. கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் சென்னை அணி 7 போட்டிகளிலும், பெங்களூரு அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.