கிரிக்கெட் வீரர் முகமது சிராஜின் வீட்டிற்கு கோலி மற்றும் டூப்ளெசிஸ் அடங்கிய, பெங்களுரூ அணி வீரர்கள் வருகை தந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


சிராஜ் வீட்டிற்கு வந்த ஆர்சிபி அணி:


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது அடுத்த லீக் போட்டியில் விளையாட, டூப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி ஐதராபாத்திற்கு வருகை தந்துள்ளது. இதனிடையே,  அங்குள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் பிலிம் நகரில் பெங்களூரு அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான, முகமது சிராஜ் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதன் புதுமனை புகுவிழாவிற்கு, ஆர்சிபி அணியை சேர்ந்த வீரர்கள் வருகை தந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  






வைரல் வீடியோ:


இதுதொடர்பாக டிவிட்டர் பயனாளி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பெங்களூரு அணி கேப்டன் டூப்ளெசிஸ், நட்சத்திர வீரர் கோலி ஆகியோருடன் கேதர் ஜாதவ் மற்றும் வேன் பார்னெல் ஆகியோர் சிராஜின் வீட்டிற்கு வந்து இருப்பது, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதோடு, நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகமும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐதராபாத் பிரியாணிக்கான நேரமிது என குறிப்பிட்டுள்ளது. அதோடு, ஹேசல்வுட், கரண் சர்மா, பிரேஸ்வெல் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.






பிளே-ஆஃப் செல்லுமா பெங்களூரு?


நடப்பு தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி தலா 6 வெற்றி மற்றும் தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது. மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். இதையடுத்து தனது முக்கியமான அடுத்த லீக் போட்டியில், வரும் 18ம் தேதியன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது. கடைசியாக விளையாடிய தனது லீக் போட்டியில், ராஜஸ்தான் அணியை 59 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்து பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.