ஐபிஎல் 16 வது சீசன் 5 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிக்கொண்டனர். இந்த போட்டி கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு 200வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பாஃப் டு பிளிசி அதிரடியாக ஆடி அரைசதம் குவிக்க, இவருக்கு பக்கபலமாக கோலியும் 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
43 பந்துகளில் 73 ரன்கள் குவித்த பெங்களூரு கேப்டன் பாஃப் டு பிளிசி, ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு அதிகளவில் ஃபேன்ஸ் கொண்ட அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். அதேபோல், தற்போதைய ஆக்டிவ் பிளேயர்களில் எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலிக்கு பிறகு அதிகளவில் பேன்ஸ் கொண்ட வீரராக தற்போதைய இந்திய மற்றும் மும்பை கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார்.
டெல்லிதான் விராட் கோலிக்கு சொந்த ஊர் என்றாலும், அவரை தத்தெடுத்தது என்னமோ பெங்களூரு அணிதான். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாக பெங்களூரு அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தாலும், இதுவரை இவரை ஆர்சிபி நிர்வாகமும், ரசிகர்களும் விட்டுகொடுத்ததில்லை. சின்னசாமி மைதானத்தில் கோலி காலடி எடுத்து வைத்தால் மைதானமே அவரது பெயர் சொல்லி அதிரும்.
இந்தநிலையில், நேற்றைய போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வேளையில், விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா பெயர் சொல்லி சின்னசாமி மைதானம் அதிர்ந்தது. இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் விராட் கோலியா..? ரோகித் சர்மாவா..? என்ற விவாதம் எழுந்து வருகிறது.
போட்டி விவரம்:
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்திருந்தார்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஃபாப் டு பிளிசி மும்பை அணியின் பந்து வீச்சை சுக்கு நூறாக நொருக்கினர். இருவரும் வான வேடிக்கை காட்டி அடுத்தடுத்து அரைசதம் விளாசினார். மும்பை அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அணியின் ஸ்கோர் 148 ரன்களாக இருந்த போது டூ பிளசிஸ் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் பெங்களூரு அணி 16.2 ஓவர்களில்172 ரன்களை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.