மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் சுப்மன் கில் ருத்ரதாண்டவம் ஆடி 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். தொட்டதெல்லாம் சிக்ஸர், ஃபோர் என பந்துகளுக்கு ரெஸ்ட்டே கொடுக்காமல் விளையாடி வருகிறார். குவாலிஃபயர் 2வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு விளையாடி வருகிறார்.


டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி, குஜராத் அணியின் இன்னிங்ஸை வழக்கம் போல் விரத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் தொடங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பாக ஆட, குஜராத் அணி சீராக ரன்கள் சேர்த்தது. முதல் ஒவரில் மட்டும் நிதானமாக ஆடிய குஜராத் அணி அதன் பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளை விரட்டத்தொடங்கியது. இதனால் குஜராத் அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது. 


அதன் பின்னர் 7வது ஓவரை வீச வந்த பியூஷ் சாவ்லாவிடம் சாஹா தனது விக்கெட்டை வைடு பந்தில் இழந்து வெளியேறினார். இதனால் மும்பை அணிக்கு கொஞ்சம் நம்பிக்கை கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் வந்த சாய் சுதர்சன் கில்லுக்கு ஒத்துழைப்பு தர, ஒற்றை மனிதராக மும்பை அணியின் பந்து வீச்சை காலி செய்தார் கில். 


மும்பை அணி தன்னிடம் இருந்த அனைத்து பந்து வீச்சாளர்களையும் மாறி மாறி பயன்படுத்திவிட்டது. ஆனால் கில் அனைவரது பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். இதனால் அரைசதத்தினைக் கடந்த கில் கிடுகிடுவென சதத்தினை நோக்கி விரைந்தார். இதனால் குஜராத் அணியின் ரன்ரேட்டும் அதிகரித்தது. 49 பந்தில் தனது சதத்தினை எட்டினார். இது இந்த சீசனில் இவர் விளாசும் மூன்றாவது சதம் ஆகும். இவரது இந்த சதத்தினை குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா துள்ளிக் குதித்து கொண்டாடினார். 


சதத்துக்குப் பின்னர், மேலும் அதிரடியாக ஆடிய அவர், அடுத்தடுத்து சிக்ஸர்களை விரட்டினார். இவரின் ருத்ரதாண்டவ ஆட்டத்தினை மும்பை பந்து வீச்சாளர்களால் தடுக்கவே முடியவில்லை. 15.1 ஓவரில் குஜராத் அணி 170 ரன்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.