ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போகும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டி இன்று  அதாவது மே மாதம் 26ஆம் தேதி நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 28ஆம் தேதி இறுதிப் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ளும். இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 


பரபரப்பான ஐபிஎல் தொடர் நாளை மறுநாளுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் திருவிழா கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களாக கொண்டாட்டமாக இருந்தது. 10 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் தொடரில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது. 


இதில் மே 23 ஆம் தேதி நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் அணியை சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து மே 24 ஆம் தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதிப் பெற்றது.  இந்த போட்டியில் மும்பை அணி, முதல் தகுதிச்சுற்று  போட்டியில் தோற்ற குஜராத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 


இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர்: 


ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்தாண்டு அறிமுகமாகி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேசமயம் 5 முறை சாம்பியனான மும்பை கடந்த இரு சீசன்களாகவே தட்டுதடுமாறி வருகிறது. இப்படியான நிலையில் இரு அணிகளும் 2 சீசன்களையும் சேர்த்து 3 ஆட்டங்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 2 ஆட்டங்களில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனிலும் 2 லீக் ஆட்டங்களில் குஜராத், மும்பை அணிகள் மோதி தலா ஒரு வெற்றியைப் பெற்றது. 


சம பலத்தில் வீரர்கள் 


குஜராத் அணியை பொறுத்தவரை லீக் போட்டியில் கெத்தாக முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. ஆனால் முதல் தகுதிச்சுற்று போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணி தோல்வியை தழுவியது. குறிப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் குஜராத் அணி வலுவாக உள்ளது. தொடக்க வீரர் சுப்மன் கில் ரன் குவிக்கும் மிஷினாகவே மாறி விட்டார். பந்துவீச்சில் முகம்மது ஷமி, மோகித் ஷர்மா, ரஷித்கான் என மிரட்ட காத்திருக்கின்றனர். உள்ளூர் மைதானம் என்பதால் குஜராத் அணிக்கு இப்போட்டி சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அதேசமயம் லீக் ஆட்டங்களில் சரியான நேரத்தில் எழுச்சி பெற்ற மும்பை அணி கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது. இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் 16 சீசன்களில் 7வது முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லும். நடப்பு சாம்பியானா? முன்னாள் சாம்பியானா? எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. இந்த போட்டி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா செயலியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.