ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அதிரடி:
சென்னை அணி நிர்ணயித்த 201 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அதிரடியான தொடக்கம் கிடைத்தது. கேப்டன் தவான் ம்ற்றும் ப்ரப்சிம்ரன் சிங் கூட்டணி அதிரடியாக ஆடி பவர்-பிளேயில் ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடி வந்த தவான் 28 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார். இந்த போட்டியின் மூலம், ஐபிஎல் தொடரில் அவர் 6,500 ரன்களை பூர்த்தி செய்துள்ளார். இந்த கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களை சேர்த்தது.
அடுத்தடுத்து விக்கெட்:
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ப்ரப்சிம்ரன் சிங், 42 ரன்களை சேர்த்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார. இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். அவரை தொடர்ந்து, அதர்வா தைடேவும் வெறும் 13 ரன்களுக்கு, ஜடேஜா பந்துவீச்சில் காட் & போல்ட் முறையில் நடையை கட்டினார்.
பொறுப்பான ஆட்டம்:
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததை தொடர்ந்து, 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த லிவிங்ஸ்டோன் மற்றும் சாம் கரண் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களையும் விளாசியது. 16வது ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசிய லிவிங்ஸ்டோன், 40 ரன்களை சேர்த்து இருந்தபோது தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும். கடைசி கட்டத்தில் ஜிதேஷ் சர்மா 10 பந்துகளில் 21 ரன்களை சேர்த்தார்.
பஞ்சாப் த்ரில் வெற்றி
தொடர்ந்து கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பதிரனா சிறப்பாக பந்து வீசினார். இருப்பினும், கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது சிகந்தர் ராஜா, லெக் சைடில் பந்தை அடித்து 3 ரன்களை ஓடியே எடுத்துவிட்டனர். இதனால் பஞ்சாப் அணி இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸ்:
தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஐபிஎல் வரலாற்றில் இது 999வது போட்டியாகும். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருத்ராஜ் மற்றும் கான்வே களமிறங்கி சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.
ருத்ராஜ் - கான்வே அதிரடி:
ருத்ராஜ் மற்றும் கான்வே கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சீரான இடைவெளியில் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை விளாசியது. தொடர்ந்து 37 ரன்களை சேர்த்து இருந்தபோது சிகந்தர் ராஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கான்வே 30 பந்துகளில் தனது அரைசத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ஷிவம் துபேவும் தனது பங்கிற்கு பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார். 28 ரன்களை சேர்த்து இருந்தபோது, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவர் ஆட்டமிழந்தார்.
கான்வே ரன் வேட்டை:
மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய கான்வே, பஞ்சாப் பந்துவீச்சாளர்களை நிலை குலைய செய்தார். இறுதிவரையில் ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 52 பந்துகளில் 92 ரன்களை சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக மொயீன் அலியும் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். இருப்பினும், 10 ரன்கள் சேர்த்து இருந்தபோது, ராகுல் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜடேஜா பவுண்டரி அடிக்க முடியாமல் திணறினார். இதனால், 12 ரன்களை சேர்த்து இருந்தபோது சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கேப்டன் தோனி 20வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சர்களாக விளாச சென்னை அணி 200 ரன்களை எட்டியது.
பஞ்சாபிற்கு ரன்கள் இலக்கு:
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை சேர்த்தது. ஆனா,இறுதியில் அந்த இலக்கை எட்டி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.