ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


டாஸ் வென்ற சென்னை:


ஐபிஎல் தொடரில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஐபிஎல் வரலாற்றில் இது 999வது போட்டியாகும். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருத்ராஜ் மற்றும் கான்வே களமிறங்கி சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.


ருத்ராஜ் - கான்வே அதிரடி:


ருத்ராஜ் மற்றும் கான்வே கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சீரான இடைவெளியில் பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை விளாசியது. தொடர்ந்து 37 ரன்களை சேர்த்து இருந்தபோது சிகந்தர் ராஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். இந்த கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 86 ரன்களை சேர்த்தது. மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கான்வே 30 பந்துகளில் தனது அரைசத்தை பூர்த்தி செய்தார். நடப்பு தொடரில் அவர் அடித்த மூன்றாவது அரைசதம் இதுவாகும் மறுமுனையில் ஷிவம் துபேவும் தனது பங்கிற்கு பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார். 28 ரன்களை சேர்த்து இருந்தபோது, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவர் ஆட்டமிழந்தார்.


கான்வே ரன் வேட்டை:


மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய கான்வே, பஞ்சாப் பந்துவீச்சாளர்களை நிலை குலைய செய்தார். இறுதிவரையில் ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 52 பந்துகளில் 92 ரன்களை சேர்த்தார். இதில் 16 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடங்கும்.  அவருக்கு உறுதுணையாக மொயீன் அலியும் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். இருப்பினும், 10 ரன்கள் சேர்த்து இருந்தபோது, ராகுல் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜடேஜா பவுண்டரி அடிக்க முடியாமல் திணறினார். இதனால், 12 ரன்களை சேர்த்து இருந்தபோது சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கேப்டன் தோனி 20வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சர்களாக விளாசெ சென்னை அணி 200 ரன்களை எட்டியது.


பஞ்சாபிற்கு ரன்கள் இலக்கு:


இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், சிகந்தர் ராஜா, சாம் கரண் மற்றும் ராகுல் சஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.  ஒரு கட்டத்தில் 230 ரன்கள் வரை சென்னை அணி சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிகட்டத்தில் சிறப்பாக பந்துவீசி சென்னை அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இந்த இலக்கை பஞ்சாப் அணி பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.