ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 18) ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் பந்து வீச முடிவு செய்தார்.


பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் களமிறங்கிய மும்பை அணியின் பேட்டிங்கினை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் மற்றும் இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தொடங்கினர். முதல் ஓவரில் ஒரு பவுண்டரியை தட்டிவிட்ட ரோகித் சர்மா அதன் பின்னர் அதிரடிகாட்டத் தொடங்கினார். கிடைத்த பந்துகளை லாவகமாக பவுண்டரிக்கு தட்டிவிட்ட அவர், தமிழ்நாட்டினைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார். இதனால் அணியின் ரன் அதிகரித்தது. ஒரு முனையில் ரோகித் சர்மா பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினால், இஷான் கிஷன் சிக்ஸருக்கு விரட்டுவதில் குறியாக இருந்தார். அதிரடியாக ஆடிவந்த இந்த ஜோடியை ஐந்தாவது ஓவரை வீசவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் தனது பந்து வீச்சில் பிரித்தார். சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா 18 பந்தில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இவர் 6 பவுண்டரிகளை விளாசினார். 


அதன் பின்னர் கைகோர்த்த கேமரூன் கிரீன் நிதானமாக ஆட பவர்ப்ளே முடிவில் 50 ரன்களை எட்டியது. அஇவர்களை பிரிக்க திட்டம் தீட்டிய மார்க்ரம்,  மார்கோ ஜென்சனை பந்து வீசும்படி கூறீனார். 12வது ஓவரை வீசிய அவர் அந்த ஓவரின் முதல் பந்தில் இஷான் கிஷனையும் ஐந்தாவது பந்தில் சூர்யகுமார் யாதவையும் வீழ்த்தினார். இதனால், மும்பை அணி ஒரே ஓவருக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் என ஹைதராபாத் அணி நினைத்தது. ஆனால் அடுத்து களமிறங்கிய திலக் வர்மா ஹைதரபாத்தை சொந்த ஊராகக் கொண்டவர் என்பதால், சிக்ஸர்களை பறகக்விட்டார். மொத்தம் 17 பந்துகளை எதிர்கொண்ட திலக் 37 ரன்கள் எடுத்தார். திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 150 ரன்களை எட்டியது. 


களமிறங்கியபோது நிதானமாக ஆடிய கேமரூன் கிரீன் இறுதியில் அதிரடியாக ஆடினார். இதனால் அவர் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடினார். நடராஜன் ஓவரில் மூன்று பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசினார்.  இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் சேர்த்தது. 


அதன் பின்னர் களமிறங்கிய ஹைதரபாத் அணி பவர்ப்ளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் சீராக ரன்ரேட் உயர்ந்தாலும் அவ்வபோது விக்கெட்டுகளை இழந்தது. இதனால் வெற்றி இலக்கை நோக்கி சீராக நகர்ந்து கொண்டு இருந்தது. 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவை எனும் நிலையில் இருந்தது. ஆனால் இறுதியில் ஹைதரபாத் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.