IPL 2023: ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மொஹாலியில் உள்ள மைதானத்தில் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து, 214 ரன்கள் குவித்து மும்பை அணிக்கு 215 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருந்த மும்பை அணி 6வது இடத்துக்கு முன்னேறியது. இது அனைவரும் அறிந்த விசயம் தான் ஆனால், இந்த போட்டியின் வெற்றிக்குப் பின்னர் மும்பை அணி செய்த விஷயம் தான் இந்த செய்திக்கான உந்துதலே.
ஆமாம் போட்டியை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அனைத்து காவல் துறையையும் குறிப்பிட்டு, ”அன்பிற்குரிய காவல்துறையே, நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாட வந்தோம். இதில் நாங்கள் வெற்றி பொற்றுள்ளோம். இங்கு ஒரு அணி தோற்கடிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கவனிக்கவேண்டிய பணிகள் அதிகமாக இருக்கும். உங்களின் சேவைக்காக நன்றி என குறிப்பிட்டுள்ளது”.
இந்த பதிவை மும்பை இந்தியன்ஸ் அணி ஏதோ இயல்பாக பதிவிடவில்லை. மாறாக இந்த பதிவிற்கு ஒரு வரலாறு உண்டு. ஆமாம் இந்த ஐபிஎல் தொடலில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இதற்கு முன்னர் போட்டியிட்டன. அந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி மும்பை அணிக்கு 215 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. அந்த போட்டியின் இறுதி ஓவரில் பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் திலக்வர்மா மற்றும் வதேராவின் விக்கெட்டினை க்ளீன் போல்ட் மூலம் கைப்பற்றினார். மேலும், அந்த இரண்டு விக்கெட்டுகளின் போதும், மிடில் ஸ்டெம்ப் உடைந்தது. இதனால், பஞ்சாப் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் மும்பை காவல்துறையை டேக் செய்து, ”அன்பிற்குரிய மும்பை காவல்துறையே, நாங்கள் இங்கொரு குற்றம் குறித்து புகார் அளிக்கவுள்ளோம்” என கூறியது.
இந்த டிவிட்டர் போர் கடந்த போட்டியில் பஞ்சாப் அணி மும்பை வான்கடேவில் போட்டி தொடங்குவதற்கு முன்னரே தொடங்கியது. அதற்கெல்லாம் அவ்வப்போது டிவிட்டரில் பதிலடி கொடுத்து வந்த மும்பை அணி அர்ஷ்தீப் சிங் இரண்டு முறை ஸ்டெம்ப்களை உடைத்தற்கு பதிலடி கொடுக்காமல் இருந்தது. அதற்கு நேற்றைய போட்டியில் வென்ற பின்னர் பதிலடி கொடுத்துள்ளது.