MI vs GT, IPL 2023: ஐபிஎல் தொடரில் இன்று (மே 12) மும்பை வான்கடேவில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமான போட்டி என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருந்தனர். போட்டி குறித்த நேரத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் தனது அணி பந்து வீசும் என கூறினார். 


அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னிங்ஸை தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் சிறப்பாக ஆடினர். இவர்களின் அதிரடி ஆட்டத்தினால் மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரில் பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் 7வது ஓவரை வீசிய ரஷித் கானின் பந்து வீச்சில் ரோகித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 


அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் வதேரா இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர் . இதனால் மும்பை அணியின் ரன்ரேட் 10க்கும் குறையாமல் இருந்தது. ஆனால் 9வது ஓவரில் மீண்டும் ரஷித் கான் விக்கெட் விழ்த்தினார். சிறப்பாக விளையாடி வந்த வதேரா எதிர்பாராத விதமாக இன்சைடு எஜ்ஜினால் போல்ட் ஆக மும்பை அணி தடுமாற்றத்திற்கு ஆளானது. 


ஆனால் அதன் பின்னர் வந்த விஷ்ணு வினோத் தனது நுணுக்கமான ஆட்டத்தினால் குஜராத் பந்து வீச்சாளர்களுக்கு சவால் அளித்தார். சூர்யகுமாருடன் இணைந்த அவர் சிறப்பாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினார். வினோத்தின் ஆட்டம் சூர்யகுமாருக்கு நம்பிக்கை அளித்ததைப் போல் ஆடினார். இவர்களது பார்ட்னர்ஷிப்பினால் 15 ஓவர்கள் முடிவில் மும்பை அனி 151 ரன்கள் சேர்தது. 


இந்த நிலைமையைப் பார்க்கும் போது மும்பை அணி 200 ரன்களை 18வது ஓவரில் எட்டிவிடும் போல் இருந்தது. ஆனால் 16வது ஓவரை வீச வந்த மோகித் சர்மா ஸ்லோவான பந்துகளை வீசியதுடன், அந்த ஓவரில் இரண்டு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து விஷ்ணு வினோத்தின் விக்கெட்டைக் கைப்பற்றினார். அதன் பின்னர் களத்திற்கு வந்தார் டிம் டேவிட். இதற்கிடையில் 32 பந்தில் தனது அரைசத்தினை பூர்த்தி செய்தார் சூர்யகுமார் யாதவ். ஆனால் ரஷித் கான் வீசிய அவரது 4வது ஓவரின் இறுதிப் பந்தில் டிம் டேவிட் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 


இறுதி மூன்று ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார். போட்டியின் இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்தார். இறுதில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் சேர்த்துள்ளது.