கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் 16வது சீசனின்  இறுதிபோட்டி நடைபெற இருந்தது. அன்றைய நாளில் மழை குறுக்கிட்டதால் போட்டியானது அடுத்த நாளான நேற்று நடந்தது. 


6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாய் தொடங்கி 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரராக விருத்திமான சஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியில் ஈடுபட்டனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 7 ஓவர்களில் 67 ரன்கள் குவித்தது. 20 பந்துகளில் 39 ரன்கள் குவித்திருந்த சுப்மன் கில், எம்.எஸ். தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். 3வதாக களமிறங்கிய சாய் சுதர்சன், சஹாவுடன் சேர்ந்து சக்கைப்போடு போட்டார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்கோர் 200 ஆக எகிறியது. 


20 ஓவர் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்திருந்தார். சென்னை அணி பேட்டிங் செய்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இரவு 12.10 மணிக்கு போட்டி தொடங்கியது. 


171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு 15 வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டைக்கில் இருந்த ஜடேஜா, மோகித் சர்மா பந்தில் 6 மற்றும் 4 ரன்களை பறக்கவிட சென்னை அணி வெற்றிபெற்றது. இதன்மூலம், ஐபிஎல் தொடரில் 5வது முறையாக தோனி தலைமையிலான சென்னை அணி கோப்பை வென்று சாதனை படைத்தது. 


சென்னை அணி கோப்பை வென்றதன்மூலம் வித்தியாசமான சாதனை ஒன்றை இலங்கை வீரர் மதீஷா பத்திரனா தனதாக்கியுள்ளார். அதாவது, 20 வயது 161 நாட்களில் ஐபிஎல் கோப்பையை வென்ற மூன்றாவது இளைய வீரர் என்ற பெருமையையும் பத்திரனா பெற்றார். அவருக்கு முன், ரவீந்திர ஜடேஜா (2008 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 19 வயது 178 நாட்களிலும், ராகுல் சாஹர் 2009இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 19வயது 281 நாட்களில் ஐபிஎல் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த மிக இளம் வயது வீரர்களாக முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளனர். 


மதீஷா பத்திரனா இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளுடன்  8 என்ற பொருளாதாரத்துடன் சிறப்பாக பந்து வீசி இருந்தார். சென்னை அணிக்காக இந்த சீசனின் மூன்றாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் பத்திரனா படைத்தார். 


அவரைத் தவிர, மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ராஜ்வர்தன் ஹங்கர்கேகரும் (20 வயது 201 நாட்களில்) பட்டத்தை வென்ற நான்காவது இளைய வீரர் ஆனார். 20 வயதான இவர் சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.