ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது.


சென்னை - லக்னோ மோதல்:


ஐபிஎல் 16வது சீசனின் 46வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் லக்னோ அணி இன்று களமிறங்கியது. அதேநேரம் காயம் காரணமாக கே.எல். ராகுல் இந்த போட்டியில் விளையாடாததால், க்ருணால் பாண்ட்யா லக்னோ அணிக்கு தலைமை தாங்கியுள்ளார்.


சுழலில் சம்பவம்:


லக்னோ அணி ஏற்கனவே சுழலுக்கு சாதகமாக உள்ள சூழலில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்தது டாஸ் வென்ற சென்னை அணிக்கு கூடுதல் பலமாக அமைந்தது. லக்னோ அணி வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக சுழல்பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.


சரிந்த விக்கெட்டுகள்:


தொடக்க ஆட்டக்கரரான கைல் மேயர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து வந்த கேப்டன் க்ருணால் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான வோரா 10 ரன்களில் நடையை கட்டினார். தொடர்ந்து, ஸ்டோய்னிஷ் 6 ரன்களிலும், கரண் சர்மா 9 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார். லக்னோ அணியின் முதல் 5 விக்கெட்டுகளும் சென்னையின் சுழற்பந்துவீச்சில் இருந்து தான் கிடைத்தது. இந்த சரிவில் இருந்து இறுதி வரையில் லக்னோ அணியால் மீளவே முடியவில்லை.


பொறுப்பான கூட்டணி:


சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், 44 ரன்களை சேர்ப்பதற்குள் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பூரான் மற்றும் பதோனி கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, லக்னோ அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த கூட்டணி 59 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், நிக்கோலஸ் பூரான் ஆட்டமிழந்தார். இவர் 20 ரன்களை சேர்த்து இருந்தபோது, பதிரனா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி 30 பந்துகளில் அரைசதம் கடந்தார்.


சென்னை அணிக்கு இலக்கு:


போட்டியில் 19.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால், போட்டி நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பிரித்து வழங்கப்பட்டது. இதன் மூலம் தலா 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் லக்னொ அணி 2வது இடத்திற்கும் சென்னை அணி 3வது இடத்திற்கும் முன்னேறி உள்ளது.